செய்திகள்

ரஜினி அடுத்த படத்தை இயக்குகிறார் ’மெட்ராஸ்’ ரஞ்சித்

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கப் போகிறார் என்று ஆரம்பத்தில் செய்திகள் வெளிவந்தன. இப்போது யாருமே எதிர்பார்க்காத மாற்றம் ஏற்பட்டுள்ளது. அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கிய ரஞ்சித், ரஜினியின் அடுத்த படத்தை இயக்கவுள்ளார்.

ரஞ்சித் இயக்கும் இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரிப்பதாகத் தெரிகிறது. ரஞ்சித்தின் இரண்டு படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்துள்ளார். எனவே இந்தப் படத்துக்கும் அவரே இசையமைக்கப் போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எந்திரனுக்குப் பிறகு ரஜினி நடித்த கோச்சடையான், லிங்கா ஆகிய இரு படங்களும் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. அதிலும் லிங்கா, ரஜினிக்குப் பல தொந்தரவுகளை தந்தது. இந்த நிலையில் இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்தது மட்டுமில்லாமல் தமிழ்சினிமாவின் நம்பிக்கை இயக்குநராக இருக்கும் ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினி நடிப்பது அவரது ரசிகர்களை வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. தகவல் தெரிந்தவுடன் பலரும் சமூகவலைத்தளங்களில் தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.