செய்திகள்

ரணிலின் நேர்காணல்: தமிழகத்தில் கடும் எதிர்ப்பு

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்தால் துப்பாக்கியால் சுடுவதில் தவறில்லை என்ற அர்த்தம் தொனிக்கும் வகையில் இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பேசியிருப்பது தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேட்டியளித்த ரணில், தமிழக மீனவர் பிரச்சனை குறித்தும் பேசினார்.

அப்போது, இந்திய மீனவர்கள் இழுவை வலைகளைக் கொண்டு மீன்பிடிப்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்த ரணில், அவர்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் வந்து மீன்பிடிக்கும் நிலையில், கடற்படையினர் மனித உரிமைகளை மீறிவிட்டதாக குற்றம்சாட்டக்கூடாது என்றும் கூறினார்.

மேலும், எனது வீட்டில் ஒருவர் அத்துமீறி நுழைந்தால், அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதை சட்டம் அனுமதிக்கிறது என்றும் ரணில் கூறினார்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் வந்து யாழ்ப்பாணம் மீனவர்களின் வாழ்வாதரத்தை எடுத்துச்செல்லக்கூடாது என்றும் ரணில் கருத்துத் தெரிவித்தார்.

இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், ரணில் விக்ரமசிங்கேவின் இந்தக் கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன், அமைதியாகவும் ராஜதந்திர ரீதியிலும் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்று நம்புவதாகக் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இந்தியப் பிரதமர் மார்ச் 13ஆம் தேதி இலங்கைக்குச் செல்லவிருக்கும் நிலையில், இடைப்பட்ட நேரத்தில் வரும் செய்திகளை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கூறினார்.

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயம் முடிவடைந்த பிறகே இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளுக்கிடையிலான பேச்சு வார்த்தை நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.