செய்திகள்

ரணிலுடன் பசில் பேச்சு: தோல்வியை ஏற்றுக்கொண்டார்! சுமூகமான அதிகார மாற்றத்துக்கு ஏற்பாடு?

ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்புகொண்டு பேசியுள்ளதாக எதிரணி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தத் தேர்தலில் தமக்கு ஏற்பட்டுள்ள தோல்வியை பசில் ராஜபக்‌ஷ ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலையில் இருவருக்கும் இடையிலான உரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதேவேளையில், கடும் பாதுகாப்பு ஏற்பபாடுகள் செய்யப்பட்டுள்ள அலரிமாளிகையை நோக்கி முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் செல்வதைக் காணக்கூடியதாக இருந்துள்ளது. தன்னுடைய அமைச்சரவையை அவசரமாகக் கூட்டியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ நிலைமைகளை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுமூகமான அதிகார மாற்றம் தொடர்பாக எதிரணி தரப்பிலும் பேச்சுக்கள் ஆரம்பமாகியிரப்பதாகத் தெரியவந்திருக்கின்றது. முக்கிய அமைச்சர்கள் சிலர் சுமூகமான அதிகார மாற்றம் குறித்து எதிரணி முக்கியஸ்த்தர்களுடன் அதிகாலையிலேயே பேச்சுக்களை நடத்தியிருப்பதை ஆளும் கட்சியினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.