செய்திகள்

ரணிலைச் சந்தித்து பேசிய பின்னர் அலரி மாளிகையிலிருந்து வெளியேறினார் மகிந்த ராஜபக்‌ஷ

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தனக்குப் பாதகமான முறையில் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், இன்று காலை மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அலரி மாளிகையிலிருந்து வெளியேறியுள்ளார்.

இன்று காலை 6.00 மணியளவில் அலரிமாளிகையிலிருந்து மகிந்த ராஜபக்‌ஷ வெளியேறியதை அலரி மாளிகை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. சமூகமான அதிகாரப் பரிமாற்றத்துக்கு சந்தர்ப்பத்தைக் கொடுக்கும் வகையிலேயே அலரி மாளிகையிலிருந்து அவர் வெளியேறினார்.

இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகைக்கு அழைத்து அவருடன் பேசிய மகிந்த ராஜபக்‌ஷ, மக்களின் விருப்பத்துக்கு அமைய சுமூகமான அதிகார மாற்றத்துக்கு வசதியாக தான் அலரி மாளிகையிலிருந்து வெளியேறுவதாகத் தெரிவித்தார். அதேவேளையில், தனது தோல்வியையும் அவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்புக்கொண்டதாக மகிந்தவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அதற்கு முன்னர் மைத்திரிபால சிறிசேனவுடன் தொடர்புகொண்ட அவர், மைத்திரியை வாழத்தியதாக அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. அதேவேளையில், தேர்தலில் தமக்கு ஏற்பட்ட தோல்வியையும் அவர் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தலின் முடிவுகள் முழுமையாக வளிவராத போதிலும், முடிவுகள் எவ்வாறாக அமையும் என்பதன் அடிப்படையிலேயே அலரிமாளிகையிலிருந்து உடனடியாகவே வெளியேறும் முடிவை அவர் எடுத்தாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. தேர்தலில் தோல்வியடைந்தால் சுமூகமான அதிகார மாற்றத்துக்கு தான் வழிவகுப்பதாக மகிந்த ராஜபக்‌ஷ ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

மகிந்த ராஜபக்‌ஷ வெளியேறுவதை முன்னிட்டு அலரிமாளிகை அதிகாலையிலேயே பரபரப்பாகக் காணப்பட்டது. அவர் வெளியேறிய போது எடுத்த படத்தை மேலே காணலாம்.