செய்திகள்

ரணில்- விக்கி பனிப்போர் முடிவுக்கு வர வேண்டும்: மனோ கணேசன்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வடமாகாண முதல்வர் சீ. வி. விக்னேஸ்வரன் ஆகிய இருவருக்கும் இடையிலான முரண்பாடுகள் முடிவுக்கு வர வேண்டும். இந்நாட்டில் கடந்த காலத்தில் நடைபெற்ற ஆயுத போரை மனதில் கொண்டு இந்த பனிப்போர் நின்றிட வேண்டும். தேசிய நலன் கருதி இந்த கோரிக்கையை நான் இந்த இருவரையும் நோக்கி பகிரங்கமாக விடுக்கின்றேன் என தேசிய நிறைவேற்று சபை உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இந்த இருவரிடையேயும் மத்தியஸ்தம் செய்திட வேண்டும் என்ற கோரிக்கையை, யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் இருக்கின்ற சமூக நலன் விரும்பிகள் பலர் கடந்த சில நாட்களாக என்னிடம் விடுத்து வருகின்றார்கள். என்னால் மத்தியஸ்தம் செய்திட முடியாது. இத்தகைய விவகாரங்களில் மத்தியஸ்தம் செய்ய கிளம்பும் மத்தியஸ்தர் கடைசியில் கஷ்டத்தில் விழுவது இந்நாட்டு வரலாறு. இரவில் கிணற்றில் தவறி விழுவது சகஜம். ஆனால், நன்கு கண் தெரியும் நண்பகலில் கிணற்றில் விழ முடியுமா? எனவே கனவான்களாகிய இருவரையும் நோக்கி பகிரங்கமாக சிங்கள, தமிழ் மொழிகளில் இந்த கோரிக்கையை, எங்களது இந்த அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுவோம் மேடையிலிருந்து விடுக்கின்றேன். நான் செய்யக்கூடியது இதுதான் என நம்புகிறேன்.

இந்த முரண்பாட்டின் ஆரம்பம் எனக்கு நன்கு தெரியும். அதுபற்றி இங்கே நான் பகிரங்கமாக கருத்து கூற விரும்பவில்லை. எதிர்காலத்தில் அவசியம் ஏற்படுமானால், அவ்வேளையில் அதுபற்றி நான் பேசுவேன். இன்று அதுபற்றி கூறினால் இந்த முரண்பாடு இன்னமும் முற்றி விடும். அது நாட்டுக்கு நல்லது அல்ல. நாட்டு நலனையும், எங்கள் இனத்து நலனையும் மனதில் கொண்டு செயற்படும் பொறுப்புள்ள கட்சியின் தலைவன் என்ற முறையில் நான் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளேன்.

பிரதமரின் சமீபத்தைய யாழ் விஜயம் தொடர்பில் பிரதமர் அலுவலகம், முதல்வர் அலுவலகத்துக்கு அறிவித்தல் தந்திருந்ததா என்று எனக்கு தெரியாது. அந்த அறிவித்தலை முதல்வர் அலுவலகம் ஏற்றுக்கொள்ளவில்லையா என்றும் எனக்கு தெரியாது. எனினும் நாட்டின் பிரதமர், வடமாகாணத்திற்கு சென்றபோது அங்கே பிரதமரும், முதல்வரும் சந்தித்து மக்களை நலன் தொடர்பில் உரையாட முடியமல் போனது தூரதிஸ்டவசமானது.

இந்நாட்டின் தமிழ், முஸ்லிம், சிங்கள தேசிய ஐக்கியத்துக்கும், தமிழ், சிங்கள உறவுகளுக்கும் பிரதமர் விக்ரமசிங்க, முதல்வர் விக்னேஸ்வரன் ஆகியோர் இடையே புரிந்துணர்வு அவசியம். வடக்கிற்கும், தெற்கிற்கும் இடையில் நல்ல உறவு வேண்டும். நான் எப்போதும் இந்த இரண்டு முனைகளுக்கும் இடையில் பாலமாக இருந்து வந்துள்ளேன். அதனாலேயே இதை நான் கூறுகிறேன்.

விக்னேஸ்வரன், முதல்வர் பதவியை தேடி பெறவில்லை. பதவிதான் அவரை தேடி வந்தது. சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற அவரது நீதித்துறை பணி ஓய்வு நிகழ்வினை அடுத்து, இனிமேல் அரசியல் பொறுப்பை ஏற்றிடுங்கள் என, அவர் ஓய்வு பெற்ற அதே தினமே முதன் முதலாக பகிரங்கமாக நான் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தேன்.

அவ்வேளையில் வடமாகாணசபை தேர்தல் அறிவிப்பு வெளியாகி இருக்கவில்லை. பின்னர் தேர்தல் அறிவிப்பு வெளியான பின், நானும், தமிழ் ஊடகத்துறை மற்றும் சமூகத்துறை நண்பர்கள் பலரும், கூடி பேசி திட்டமிட்டு, கொழும்பில் பணி ஓய்வில் இருந்த அவரை வலியுறுத்தி சம்மதிக்க வைத்து, யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தோம். தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களும் இதையே விரும்பி இருந்தார்கள். எனவே அவர் தனது முதல்வர் பணியை சிறப்பாக செய்திடும் சூழலை உறுதி செய்திடுவது நமது கடமை.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முதிர்ச்சியுள்ள ஒரு சிரேஷ்ட அரசியல்வாதி. வட மாகாணத்து மக்களின் ஆணையை பெற்றுள்ள முதல்வர் விக்னேஸ்வரன், வட இலங்கையில் மிகவும் பிரபலமான அரசியல் தலைவர். இந்நோக்கில் இருவருக்கும் இடையில் நல்லுறவு இருந்திட வேண்டுமென நான் விரும்புகிறேன்.