செய்திகள்

ரயில்வே துறையில் நான்கு வருடங்களில் ரூ 4,000 கோடிக்கு மேல் ஊழல்!

2011 ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த நான்கு வருடங்களில் இந்திய ரயில்வே துறையில் ரூ.4 ஆயிரம் கோடி பெறுமதியான ஊழல் இடம்பெற்றுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. சரக்கு ரயில்களில் ஏற்றப்படும் பொருட்களின் நிறை அளவைக் குறைத்துக் காண்பித்து அதன் மூலம் ரயில்வே துறைக்கு சுமார் ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஊழல் தொடர்பாக தமிழகத்தில் இருந்து மூன்று வழக்குகளையும் கர்நாடகாவில் இருந்து ஒரு வழக்கையும் சிபிஐ பதிவு செய்துள்ளது.
சரக்கு ரயில்களில் எடையைக் குறைத்துக் காண்பித்து அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் எடையை ஏற்றி, அதன் மூலம் சில ரயில்வே அதிகாரிகளும், தனியார் நிறுவனங்களும் சுயலாபம் அடைந்து வந்துள்ளதாக சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் சிபிஐ அமைப்பு திடீரென ரயில்வே துறையில் சில சோதனைகளை மேற்கொண்டது. அப்போது, ரயில்வே பணியாளர்கள் சிலர் மென்பொருட்களை மாற்றிய மைத்து, அதன் மூலம் அனுமதிக் கப்பட்ட அளவுக்கு அதிகமாக சரக்குகளை ரயிலில் ஏற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக சிபிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது, “இவ்வாறு 2011ம் ஆண்டு முதல் மோசடி செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில் ரயில்வே துறைக்கு 2012-13ம் ஆண்டு கணக்குப்படி மட்டும் ரூ.4,263 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது” என்றார்.