செய்திகள்

ரவிராஜ் படுகொலை: 3 கடற்படை வீரர்களையும் அடையாள அணிவகுப்பு

நடராஜா ரவிராஜ் படுகொலை சந்தேக நபர்களை எதிர்வரும் 7ஆம் திகதி அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கடற்படை வீரர்கள் மூவரையுமே இவ்வாறு அடையாள அணி வகுப்பிற்கு உட்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள மூன்று கடற்படை வீரர்களும் நேற்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த வேண்டியது அவசியம் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.

அந்தக் கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் நிரோஷா பெனாண்டோ, எதிர்வரும் 7ம் திகதி சந்தேகநபர்களை அடையாள அணி வகுப்பிற்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார். அதுவரை சந்தேக நபர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நிதவான் உத்தரவு பிறப்பித்தார்.