செய்திகள்

ராஜபக்ச சகோதரர்களை பலவீனப்படுத்தவே ஒழிய தமிழர் நலன்களுக்காக அல்ல! தேசிய அரசு தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்

மாற்றத்திற்குப் பின்னருள்ள தமிழ்மக்களின் நிலை எவ்வாறு காணப்படுகிறதெனில் காத்திருக்கும் தரப்பாக அல்லது காத்திருக்க வைக்கப்படும் தரப்பாகவே அவர்கள் காணப்படுகிறார்கள். தேசிய அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் கூடத் தமிழ்மக்கள் காத்திருக்க வைக்கப்படும தரப்பாகவே உள்ளார்கள்.

இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார் பிரபல அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்.

அண்மையில் இலங்கையில் இரு பிரதான கட்சிகளும் இணைந்து உருவாக்கிய தேசிய அரசாங்கம் தொடர்பில் கருத்துக் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது

தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்வரையிலும் சக்தி மிக்க நாடுகளுடைய நிகழ்ச்சி நிரல் இலங்கைத் தீவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதாகவே அமைந்திருந்தது. ஆட்சி மாற்றம் வந்த பின்னர் அவர்களுடைய நிகழ்ச்சி நிரல் மாற்றத்தைப் பலப்படுத்துவதாயுள்ளது.

அமெரிக்காவின் தூதுவர் பிஷ்வால் எங்களுடைய மிஷன் இன்னமும் முழுமையடையவில்லை எனக் கூறியிருந்தார்.

அவர் இவ்வாறு கூற வந்தது திரும்பிச் செல்ல முடியாத தொரு புள்ளிக்குக் கொண்டு போவது அல்லது ராஜபக்ஷ சகோதரர்கள் மீளவும் எழ முடியவாறு அவர்களைத் தோற்கடிப்பது.

எனவே, அவர்களுடைய நிகழ்ச்சி நிரல் மாற்றத்தைப் பலப்படுத்துவது அல்லது ஸ்திரப்படுத்துவது ஆகும். இந்த அடிப்படையில் தான் தற்போது தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேசிய அரசாங்கமென்பது உள்நாட்டு வெளிநாட்டுத் தயாரிப்பு. இந்தத் தேசிய அரசாங்கத்தின் நோக்கம் பிரதானமாக ராஜபக்ஷக்களுக்குப் பயப்படுகிறார்கள். ராஜபக்ஷ சகோதரர்கள் நடாத்திய இரு கூட்டங்களிலும் கலந்து கொண்ட சனக் கூட்டம் தான் அவர்களை அவ்வாறு சிந்திக்க வைக்கிறது. அவர்கள் இப்பொழுதும் பலமாகவேயிருக்கிறார்கள்.

அவர்கள் மறுபடியும் பொதுத் தேர்தல் வந்தால் தற்போதைய ஆட்சியாளர்களுக்குச் சவாலாகக் காணப்படுவார்கள் என்கின்ற அச்சம் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நிலவுகின்றது. ஆகவே, அவ்வாறான சவாலான சூழ்நிலை இல்லையெனும் நிலைக்கு அவர்களைப் பலவீனப்படுத்த வேண்டும்.

அதனை நோக்கித் தான் இந்தத் தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்மக்களின் நலன்களைக் கொண்டு உருவாக்கப்படவில்லை. அதாவது மாற்றத்தின் பின்னரும் தமிழ்மக்களுடைய பிரதானமான பிரச்சினைகள் இன்னமும் விவாதிக்கப்படவில்லை.

அவர்கள் மேலோட்டமாகச் சீர்திருத்தங்களைச் செய்கிறார்கள். உதாரணமாகத் தமிழிலே தேசிய கீதம் பாடுவது, காணிகளைச் சிறிது சிறிதாக விடுவித்தல் ஆகிய சில சீர்திருத்தங்களைச் செய்கிறார்கள். தேசிய கீதம் பாடுவது என்பது சட்டப்படி ஏற்கனவே காணப்படுகிறது.

ஆனால், அவர்கள் தான் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதில் யதார்த்தம் என்னவெனில் அவர்கள் உருவாக்கிய சட்டத்தை அவர்களே மீறினார்கள். அவர்கள் மீறிய சட்டத்தை அவர்களே தற்போது அமுல்படுத்தப் போவதாகச் சொல்கிறார்கள்.

இந்தச் சூழ் நிலையில் தமிழ்மக்களுக்குப் புதிதாக எதுவும் வழங்கப்படவில்லை. இவ்வாறான விடயங்கள் எதனை உணர்த்துகின்றதெனில் அவர்கள் அடிப்படைப் பிரச்சினைகளில் கைவைக்காமல் மேலெழுந்த வாரியாகச் சில சீர்திருத்தங்களையும், சில விட்டுக் கொடுப்புக்களையும் செய்வது போலக் காட்டிக் கொள்கிறார்கள்.

தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டமை தமிழ்மக்களுக்குப் பெருமளவில் நன்மை பெற்றுத் தருமென்று கூற முடியாது. இது முழுக்க முழுக்க மாற்றத்தை உற்பத்தி செய்த தரப்புக்கும் மாற்றத்தால் நன்மையடைந்த வெளித்தரப்புக்களுக்குமே நம்பிக்கையளிக்கக் கூடியதாகவிருக்கும்.