செய்திகள்

ராஜபக்ஷவுக்கு சாதகமான நிலைமை இல்லை: த எகனொமிஸ்ட் ஆரூடம்

இலங்கையில் ஜனவரி 8ம்திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சாதகமான நிலைமை இல்லை என பிரபல சர்வதேச சஞ்சிகையான த எகனொமிஸ்ட் ஆரூடம் தெரிவித்துள்ளது. ராஜாவின் இறுதி நாட்களா என்ற தலைப்பில் அந்த சஞ்சிகை இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் குறித்து எழுதியுள்ள கட்டுரையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேர்தலை அறிவித்தவேளை கனவுகண்டதற்கு மாறாக தற்போது கடும் போட்டியை அவர் எதிர்கொள்கிறார் என த எகனமிஸ்ட் குறிப்பிட்டுள்ளது. சிறிசேன தமிழ்மக்களுக்கு நம்பிக்கையளிக்க கூடியவர் அல்ல,எனினும் அவரை தெரிவுசெய்வது நாடு எதிர்நோக்கியுள்ள சில இனஅடிப்படையிலான நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக அமையலாம். இலங்கையின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு சிறிசேனவை தெரிவுசெய்வது அவசியமாகலாம். மகிந்த ராஜபக்சவால் எல்லாரையும் எல்லாசமயத்திலும் ஏமாற்ற முடியாது என்பதை நீருப்பிப்பதற்கும் இது அவசியம் என அந்த சஞ்சிகை தெரிவித்துள்ளது.

அந்த சஞ்சிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

பேர்சி மகேந்திர ராஜபக்ச தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு வருடங்கள் இருக்கின்ற ஒரு நிலையில் ஜனவரி 8 ம்திகதி தேர்தல்கள் நடைபெறும் என அறிவித்தவேளை பலத்த நம்பிக்கைகளுடன் காணப்பட்டிருப்பார். மாகாணசபை தேர்தல்கள் அவரது அரசாங்கத்திற்கான ஆதரவு குறைவடைகின்றதை புலப்படுத்தியிருந்தபோதிலும்,எதிர்கட்சிகள் அவ்வேளை பிளவுபட்டுக் காணப்பட்டன,பொருளாதாரம் ஓரளவு சிறந்த நிலையில் காணப்பட்டது,இதுதவிர ஆட்சியிலுள்ள ஒருவரிடம் காணப்படக்கூடிய அதிகாரங்களும் அவரிடம் காணப்பட்டன. இலங்கையின் தென்பகுதி மன்னர்களில் ஒருவரின் மறுபிறப்பு தான் என்ற கட்டுக்கதைகளை பரப்பும் மகிந்த ராஜபக்ச தானே மீண்டும் வெற்றிபெறுவார் என உறுதியாக நம்பியிருப்பார்.2010 இல் அவரிற்கு கிடைத்த 57 வீதமளவிற்கு இம்முறையும் வாக்குகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் தென்பட்டன. எனினும் தற்போது அவ்வாறான நிலை சாத்தியமில்லை, பாரியஅளவில் கள்ளவாக்குகள்போடப்பட்டால் மாத்திரமே அது சாத்தியம். ராஜபக்சவே இம்முறையும் வெற்றிபெறலாம், ஆனால்போட்டி மிக நெருக்கமானதாக காணப்படும்.

இலங்கையின் தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதில் அவர்ஆற்றிய பங்களிப்பை தொடர்ந்தே அவரது ஆதரவு பல மடங்காக அதிகரித்தது. இந்த வெற்றி ஈவிரக்கமற்றதாக, இரத்தக்களறி மிகுந்ததாக காணப்பட்டது.ஆயிரக்ககணக்கான பொதுமக்களின் உயிர்களை குடித்தது. விடுதலைப்புலிகளை போன்;று இராணுவமும் யுத்தகுற்றங்களில் ஈடுபட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் நிராகரித்துள்ள அதேவேளை சிங்கள வாக்காளர்கள் அதனை கருத்தில்கொள்ளவில்லை. வெளிநாடுகளின் சதிமுயற்சிகளிலிருந்து நாட்டை பாதுகாப்பவராக மகிந்த ராஜபக்ச தன்னை சித்தரித்துவருவதுடன அதனைமையமாக வைத்தே மக்களின் ஆதரவை கோருகின்றார். மகிந்த ராஜபக்சவை ஆட்சியிலிருந்து அகற்றவேண்டுமென கருத்து முன்வைக்கப்படுவதற்கு இது ஒரு காரணம்.அதேவேளை அதற்கான வேறு பல காரணங்களும் உள்ளன.முஸ்லீம்களுக்கு எதிரான உணர்வலைகளை கட்டுப்படுத்துவதற்கு அவர் காத்திரமான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை,அவரது நிர்வாகம் அவரது குடும்பத்தவர்களின் கரங்களிலுள்ளது. ஊழல் மோசமடைந்துள்ளது.

ராஜபக்ச தனது பாராளுமன்ற பெரும்பான்மையை நீதித்துறையின் சுதந்திரத்தை பலவீனப்படுத்துவதற்கும்,அரசமைப்பில் தனக்கு சாதகமான மாற்றத்தை கொண்டுவருவதற்கும் பயன்படுத்தியுள்ளார்.ஜனாதிபதி ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் பதவிவகிக்க முடியாது என்ற கட்டுப்பாட்டை நீக்கியுள்ள அவர்,ஏற்கனவே மிதமிஞ்சிய அதிகாரங்களுடன் காணப்படும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை மேலும் பலப்படுத்தியுள்ளார். அரசியல் அமைப்பு உறுதியளித்துள்ள படி தமிழர்களுக்கு அரசியல்சுயாட்சியை வழங்குவதற்கும் அவர் முன்வரவில்லை. விசாரணைக்குட்படுத்தப்படும் ஊடகவியலாளர்களும்,சமூக செயற்பாட்டாளர்களும் அச்சத்தில் வாழ்கின்றனர்.

மேற்குலகம் மனித உரிமைகள் விடயத்தில்கொடுத்துவரும் அழுத்தங்கள் காரணமாக சீற்றமடைந்துள்ள மகிந்தராஜபக்ச நாட்டை சீனாவிற்கு அருகில்கொண்டுசென்றுள்ளார். ராஜபக்ச இம்முறை தோல்வியடைந்தால் பாரிய மக்கள் எழுச்சி காரணமாதாக அதுஅமையாது,அது அதிகரித்து வரும் வாழ்க்கைசெலவீனங்கள்,ஊழல் மற்றும் குடும்பஆட்சி, குறித்து மக்கள் மத்தியில் காணப்படும் கடும சீற்றத்தினாலேயே உண்டாகும். ராஜபக்சாக்களால் துரோகி என அழைக்கப்படும் மைத்திரிபால சிறிசேன நவம்பர் மாதம் வரை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக பதவிவகித்தவர். நாடு பரம்பரை சர்வாதிகார ஆட்சியின் பிடியில் சிக்குப்படுவதை தவிர்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் அவரின் பின்னாள் அணிதிரண்டுள்ளன.
சிறிசேன தமிழ்மக்களுக்கு நம்பிக்கையளிக்க கூடியவர் அல்ல. எனினும் அவரை தெரிவுசெய்வது நாடு எதிர்நோக்கியுள்ள சில இனஅடிப்படையிலான நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக அமையலாம்.

இலங்கை நிரந்தர ஸ்திரத்தன்மையை அனுபவிப்பதற்கு அவசியமான இதயசுத்தியுடனான நல்லிணக்கம் குறித்து சிந்திப்பது சாத்தியமாகலாம், இலங்கையின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு சிறிசேனவை தெரிவுசெய்வது அவசியமாகலாம். மகிந்த ராஜபக்சவால் எல்லாரையும் எல்லாசமயத்திலும் ஏமாற்ற முடியாது என்பதை நீருப்பிப்பதற்கும் இது அவசியம்.