செய்திகள்

ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பொலிஸார் தரப்பில் அசமந்தப்போக்கு அமைச்சர் ராஜித

ராஜபக்ஷ குடும்பத்துக்கெதிரான முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுகின்ற நிலையில் காணப்பட்ட போதும் பொலிஸ் திணைக்களம் வேண்டுமென்றே அசமந்தப்போக்கை கொண்டிருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

அரசாங்கத்தின் கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் அதேநேரம் அரசாங்கத்திற்கு பொதுமக்கள் வழங்கும் ஆதரவை மழுங்கச் செய்யும் வகையில் செயற்படும் சட்ட அமுலாக்க அதிகாரிகளின் பெயர் விபரங்களை இன்னும் சில நாட்களில் வெளியிடுவேன்.

ராஜபக்ச ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட குற்றச் செயற்பாடுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை, தேர்தலின் போது மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.

அத்துடன், விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவை கைது செய்தமை உட்பட ஏனைய சில விடயங்கள் முக்கியமானதல்ல. சி.எஸ்.என்.நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கான முதலீட்டை யார் வழங்கியது? ராஜபக்ஷ குடும்பத்தினர் மீது இரண்டு குற்றச்சாட்டுக்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்வைக்கப்பட்டு நிரூபிக்கப்படும் நிலையில் உள்ளது. அத்துடன், இரண்டு வல்லுறவு குற்றச்சாட்டுக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விடயங்கள் தொடர்பில் நாம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.