செய்திகள்

ராஜபக்ஸ ஆட்டமிழந்தமை சீனாவுக்கு பெரும் தோல்வி ; ஆனால் இந்திய ராஜதந்திரத்துக்கு பெரு வெற்றி: ராய்ட்டர் செய்திச் சேவை

ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை எதிர்பாராதவகையில் மஹிந்த ராஜபக்ஸவை ஆட்டமிழக்கச் செய்தமை தெற்காசியாவில் சீனாவின் விரிவாக்கத்துக்கு கடந்த தசாப்தங்களில் கிடைத்த பெரும் தோல்வி என்றும் இந்திய ராஜதந்திரத்துக்கு கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றி என்றும் பிராங் ஜக் டானியல் ராய்ட்டர் செய்திச் சேவைக்கு இரு தினங்களுக்கு முன்னர் எழுதிய செய்திக் கட்டுரையில் குறிப்பிட்டுளார்.

‘ராஜபக்ஸ ஆட்டம் இழக்கையில் இந்தியாவுக்கு ஒன்று சீனாவுக்கு பூஜ்யம்’ என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் இவ்வாறு குறிப்ட்டுள்ள அவர், இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றதன் பின்னர் தெற்காசிய பிராந்தியத்தில் எல்லா இடங்களிலும் அவர் சீனாவை பின்தள்ளியிருப்பதாகவும் எழுதியிருக்கிறார். இதன் பொருட்டு மோடி, சீனாவுடன் எல்லை முரண்பாடுகளைக் கொண்டிருக்கும் சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் உறவை வளர்த்திருப்பதாகவும், பங்களாதேசில் சீனாவினால் இலகுவாக வென்றிருக்கக் கூடிய ஒரு துறைமுக செயற்திட்டத்துக்காக போட்டியில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

மோடி விபரிப்பதுபோல்” கிழக்கு நோக்கிய செயல் ” என்ற இந்த உறுதிமிக்க ராஜதந்திரம், அமெரிக்காவை மகிழ்வடையச் செய்திருக்கிறது என்றும் இது தெற்காசியா நோக்கிய அமெரிக்காவின் உபாய அச்சுடன் சரியாகப் பொருந்துவதற்கு இந்தியா பலவருடங்களாக காத்திருந்த ஒன்று என்றும் அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

“கிழக்கு நோக்கி பார்த்தல்” என்ற கொள்கையில் இருந்து ” கிழக்கு நோக்கிய செயல் ” என்ற மோடியின் அணுகுமுறை தன்னையும் தனது சகாக்களையும் பெரிதும் கவர்ந்திருகிறது ” என்று கிழக்கு ஆசிய மற்றும் ஆசிய பசிபிக்குக்கான அமெரிக்காவின் துணை இராஜங்க அமைச்சர் டானியல் ரஸ்ஸல் கூறியதை தனது கட்டுரையில் மேற்கோள் காட்டியிருக்கிறார் பிராங் ஜக் டானியல்.

புலிகளுக்கெதிரான யத்தத்தின் கதாநாயகனான மஹிந்த ராஜபக்ஸவை அசைப்பதற்கு கடந்த வருடம் வரை இந்தியா தயக்கத்தையும் அச்சத்தையும் கொண்டிருந்ததாகவும், ஆனால் இந்தியாவுக்கு தெரிவிக்காமல் கடந்த செப்டெம்பரில் சீன நீர்மூழ்கி கொழும்பு துறைமுகத்தில் ஒதுங்குவதற்கு அனுமதித்தமையே இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றம் கொள்ளவைத்ததாகவும் இந்திய ராஜதந்திரி ஒருவரை மேற்கோள் காட்டி அவர் குறிப்பிட்டுளார்.

இதன் காரணமாகவே, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வேறுபட்டுக்கிடந்த சகல எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைப்பதில் இந்தியா பெரும் பங்கு ஆற்றியதகவும், இதன் காரணமாகவே இந்திய உளவு அமைப்பின் அதிகாரி ஒருவர் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அரசியல் மற்றும் ராஜதந்திர வட்டாரங்கள் கூறுவதாக அவர் எழுதியுள்ளார்.