செய்திகள்

ராஜபக்ஸ இருந்தால் நாடு குட்டிச்சுவராகிவிடும் என்று உணர்ந்தே அவரை தேர்தலுக்கு செல்ல தூண்டினேன்: அவரது ஆஸ்தான சோதிடர்

தேர்தல் ஆணையாளரினாலும் பொலிஸ் மா அதிபரினாலும் நாடு பாதுகாக்கப்பட்டதாக எல்லோரும் எழுதுவதாகவும் ஆனால் தான் இல்லாமல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றிருக்குமா என்று என்று வினா எழுப்பியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஸவின் ஆஸ்தான சோதிடர் சுமனதாச அபயகுனவர்தன, மீதமிருந்த இரண்டு ஆண்டுகளுக்கும் ராஜபக்ஸ ஆட்சியில் இருந்தால் நாடு குட்டிச்சுவராகிப் போய்விடும் என்பதை உணர்ந்தே வேண்டுமென்று ராஜபக்சவை தேர்தலுக்கு செல்வதற்கு தூண்டியதாக அவர் கூறியிருக்கிறார்.

வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்த அவர், தான் அவ்வாறு செய்யாவிட்டால் ராஜபக்ஸ இன்னமும் அலரிமாளிகையில் தான் இருப்பார் என்றும் ஆனால் இவற்றை எல்லாம் வெளியே கூறமுடியாது என்றும் அவரவர் தமது அறிவு நிலைகளுக்கேற்ப இந்த உண்மையினை புரிந்து கொள்ளவேண்டும் என்றும் குறிப்பட்டார்.

“நாடு செல்லுகின்ற நிலையில் ராஜபக்ஸ இரண்டு வருடங்கள் இன்னமும் இருந்திருந்தால் எமக்கென்றொரு நாடு இருந்திருக்காது. இதனை அறிந்து தான் நாம் இவ்வாறு செய்தோம். ராஜபக்ஸ இருந்திருந்தால் எமக்கு தொடர்ந்து நல்ல காலம் இருந்திருக்கும். ஆனால், நாடு பெரும் துயரில் இருந்திருக்கும். எவர் எதைச் சொன்னாலும், நாம் எம்மை நேசிப்பதை விட நாட்டை நேசிக்கிறோம். உண்மையைச் சொல்வதானால், நாங்கள் தான் கடந்த ஒன்பது வருடங்களும் இந்த நாட்டை ஆண்டிருந்தோம். இதனை கருத்தில் கொண்டு தான் முட்டாள்தனங்களை எல்லாம் முடிவுகட்டி இந்த நாட்டை பாதுகாப்பதற்கு வேறொருவரிடம் ஆட்சியை கையளிப்பதற்கு நாம் செயற்பட்டோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 தேர்தலுக்கு முன்னதாக கருத்து தெரிவித்த சுமனதாச அபயகுனவர்தன ராஜபக்ஸவின் வெற்றியை யாராலும் தடுத்துவிடமுடியாது என்று கூறியிருந்தார். பின்னர் , தேர்தல் முடிவடைந்தபின்னர், நோஸ்ட்ரோமஸின் எல்லா எதிர்வுகூறல்களுமே உண்மையாக இருந்ததில்லை என்றும் தன்னால் 5% ஒருவர் ஜனாதிபதி ஆகுவதற்கு உதவியளிக்க முடியும் என்றும் மிகுதி அவரது அதிஷ்டத்தில் தங்கியிருக்கிறது என்றும் பிறிதொரு வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.