செய்திகள்

ராஜபக்‌ஷக்களின் வெளிநாட்டு முதலீடுகளை கண்டறிய இந்தியா உதவி: மோடியுடன் மைத்திரி பேச்சு

மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான முன்னை ஆட்சியாளர்களால் வெளிநாடுகள் பலவற்றில் இரகசியமாகப் பதுக்கிவைக்கப்பட்டுள்ள பணம் மற்றும் சொத்துக்கள் பற்றிய தகவல்களைக் கண்டறிவதற்குத் தேவையான தகவல்களை இந்தியாவுக்கு இலங்கை வழங்கியிருக்கின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் புதுடில்லிக்கு சென்றிருந்த போது இந்தியப் பிரதமர் மோடி மற்றும் அதிகாரிகளுடன் இது தொடர்பில் விரிவான பேச்சுக்களை நடத்தியிருந்தார் என புதுடில்லியிலிருந்து வெளிவரும் என்கனேபமிக்ஸ்ட் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னைய ஆட்சியாளர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள சொத்துக்கள் பற்றிய தகவல்களை கண்டறிவதற்காக நிதிப் புலனாய்வுப் பிரிவு ஒன்றை அமைப்பதற்கான இந்தியாவின் உதவியை இலங்கை ஏற்கனவே கோரியிருந்தது. இதற்கு சாதகமான முறையில் இந்தியா பதிலளித்திருந்தது.

அதற்கு உதவும் வகையிலேயே மேலதிக தகவல்களை இலங்கை அரசு இந்தியாவுடன் இப்போது பரிமாறிக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சென்ட் மார்ட்டின் தீவுகள், கொங்ஙொங், மக்குவ, செஷல்ஸ் போன்ற வரி விதிப்பை மேற்கொள்ளாத நாடுகளுக்கு பெருந்தொகையான பணம் ராஜபக்‌ஷ குடும்பத்தினரால் மாற்றப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுவது குறித்தும் ஜனாதிபதி சிறிசேன இந்தியத் தலைமைக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றார்.

இதனைவிட  துபாய், உகண்டா, கென்யா ஆகிய நாடுகளில் சொத்துக்களில்  ராஜபக்‌ஷ குடும்பத்தினரால்  முதலீடு செய்யப்பட்டிருப்பதாக இந்தியப் பிரதமர் மோடியிடமும் இந்தியத் தலைவர்களிடமும் சிறிசேன கூறியிருக்கின்றார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராகத் தெரிவிக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்களையிட்டு அரசாங்கம் தீவிரமாக கவனம் செலுத்துவதாகத் தெரிவித்த சிறிசேன, இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளையில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தன்னுடைய அமெரிக்க விஜயத்தின் போதும், முன்னைய ஆட்சியாளர்களால் வெளிநாடுகளில் இரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள நிதி தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு அமெரிக்காவலின் உதவியை நாடியதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.