செய்திகள்

ராஜஸ்தானை வீழ்த்திய மும்பை

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் பதிலடி கொடுத்தது. முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன் குவித்தது. அம்பதிராயுடு 27 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 53 ரன்னும், லெண்டில் சிம்மன்ஸ் 31 பந்தில் 38 ரன்னும் எடுத்தனர். குல்கர்னி 2 விக்கெட்டும், சவுத்தி, தெரான், அங்கித் சர்மா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றி னார்கள்.

பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 8 ரன்னில் வெற்றி பெற்றது.

சாம்சன் 46 பந்தில் 76 ரன் (7 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். மெக்லகன் 3 விக்கெட் கைப்பற்றினார்.

இந்த வெற்றி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:–

சரியான நேரத்தில் எங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். மிகப்பெரிய ஸ்கோரை எடுத்ததால் எங்களது இந்த வெற்றியை பெற முடிந்தது. அம்பதி ராயுடுவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது.

இந்த போட்டி தொடக்கத்தில் அவருக்கு அதிகமான நெருக்கடி இருந்தது. அதிரடியாக விளையாடி நெருக்கடியில் இருந்து மீண்டார்.

நான் தொடக்க வீரராக ஆடியபோது 4–வது வரிசையில் விளையாட ரசிகர்கள் விரும்பினார்கள். தற்போது அவர்கள் நான் தொடக்க வீரராக ஆடுவதை விரும்புகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தோல்வி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் வாட்சன் கூறும்போது, நாங்கள் கடைசி வரை போராடினோம். சேசிங்கில் ஒவ்வொரு ஓவரிலும் 12 ரன்னுக்கு மேல் எடுப்பது எப்போதுமே கடினமானது. சாம்சனின் ஆட்டம் நம்பமுடியாத வகையில் பிரமிப்பாக இருந்தது, என்றார்.

மும்பை இந்தியன்ஸ் பெற்ற 3–வது வெற்றி இதுவாகும். அந்த அணி 9–வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை நாளை எதிர்கொள்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3–வது தோல்வியை தழுவியது.