செய்திகள்

ராஜேந்தரிடம் படத்தை திரையிட்டுக் காட்ட உத்தரவு

சர்ச்சைக்குரிய பாடல் இடம்பெற்றுள்ள “ரோமியோ ஜூலியட்’ படத்தை இயக்குநர் டி.ராஜேந்தருக்கு திரையிட்டுக் காட்ட வேண்டும் என, படத் தயாரிப்பாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் டி.ராஜேந்தர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: நான் பல்வேறு படங்களில் நடித்துள்ளேன். அதில் அதிகப் படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. எனது நடிப்பு, வசன உச்சரிப்பு, ஸ்டைல் ஆகியவை தனித்துவம் வாய்ந்தவை.

இந்த நிலையில் ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்துள்ள “ரோமியோ ஜூலியட்’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் “டண்டனக்கா நக்கா நக்கா…’ என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. ரோகேஷ் என்பவர் எழுதி, இசையமைப்பாளர் அனிரூத் பாடியுள்ளார்.

விளம்பர நோக்கத்துடனும், உள்நோக்கத்துடனும் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு இடையே என்னுடைய பேச்சுகள், உச்சரிப்புகள் இடம்பெற்றுள்ளன.

அவற்றை பயன்படுத்த படக்குழுவினருக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே, “டண்டனக்கா நக்கா நக்கா…’ பாடலுடன், “ரோமியோ ஜூலியட்’ படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். தொலைக்காட்சி சேனல்கள், ரேடியோக்களிலும் பாடலை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும்.

மேலும், ரூ.1 கோடி இழப்பீடு வழங்க படத் தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பின்னணி பாடியவர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரினார்.

இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

ரோமியோ ஜூலியட் படத் தயாரிப்பாளர், டி.ராஜேந்தருக்கு ஒரு வாரத்துக்குள் இந்தப் படத்தை திரையிட்டுக் காட்ட வேண்டும்.

அப்போது, படத் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் ஜெயம்ரவி ஆகியோர் உடன் இருக்க வேண்டும். படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள், வசனங்கள் இருந்தால் அது தொடர்பாக இரு தரப்பினரும் சமரசப் பேச்சுவார்த்தையில் தீர்வு காண வேண்டும்.

அதன் பிறகு எடுக்கப்படும் முடிவை இருதரப்பினரும் நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு ஜூன் 4-ஆம் தேதிக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.