செய்திகள்

ரோமில் தரையிறங்க வேண்டிய விமானம் வெனிசில் தரையிறங்கியதால் பொதுமக்கள் பீதி

இத்தாலியின் ரோம் நகரில் தரையிறங்க வேண்டிய ஜெர்மன் விங்ஸ் விமானம் வெனிஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியதால் பயணிகள் பெரும் குழப்பம் அடைந்தனர்.

நேற்று ஜெர்மன்விங்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஜெர்மன் நாட்டின் ஹனோவர் பகுதியில் இருந்து இத்தாலியின் தலைநகர் ரோம் நகருக்குச் சென்றது.

அப்போது பயணிகளில் இருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து விமான பணிப்பெண்களிடம் அவர்கள் தங்கள் நிலைமையை எடுத்துக்கூறினார்கள். இந்த தகவல் விமானிக்கு தெரிவிக்கப்பட்டது.

உடனே அவர் வெனிசில் உள்ள மார்கோ போலோ விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினார். ரோம் நகரில் தரையிறங்க வேண்டிய விமானம் வெனிஸில் தரையிறக்கப்பட்டதால் பயணிகள் பீதி அடைந்தனர். அவர்களுக்கு நடந்த விபரத்தை கூறியதும் பெருமூச்சு விட்டார்கள்.

இதனால் ரோமிற்கு உள்ளூர் நேரப்படி மதியம் 3.25 மணிக்கு சேர வேண்டிய விமானம் காலதாமதமாக இரவு 8.45 மணிக்கு சென்றடைந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இதே நிறுவனத்தின் விமானம் அல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 150 பேர் உயிரிழந்தமை யாவரும் அறிந்ததே.