செய்திகள்

ரோஹிங்கிய முஸ்லிம்களை பாரபட்சமாக நடத்துவதை நிறுத்துங்கள்: மியான்மருக்கு ஒபாமா அறிவுரை

ரோஹிங்கிய முஸ்லிம் மக்களிடம் பாரபட்சமாக நடந்துகொள்வதை முடிவுக்கு கொண்டு வரும்படி மியான்மருக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அறிவுரை கூறியுள்ளார்.இராணுவ ஆட்சி நடைபெற்று வந்த மியான்மரில் 2011-ம் ஆண்டு சீர்திருத்தங்கள் மலரச் செய்ததில் முக்கிய பங்காற்றிய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ரோஹிங்கிய முஸ்லிம் மக்களிடம் பாரபட்சமாக நடந்து கொள்வதை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்று மியான்மரை கண்டித்து உள்ளார்.

வாஷிங்டனில் தன்னை சந்தித்த தென்கிழக்கு ஆசிய நாடுகளின் இளம்தலைவர்கள் மத்தியில் இந்தப் பிரச்சினையை எழுப்பிய ஒபாமா “ரோஹிங்கிய மக்கள் மீது பாரபட்சம் காட்டப்படுகிறது. இதனால் அவர்கள் வெளியேறும் நிலை உள்ளது. ஜனநாயக மாற்றத்தில் வெற்றி பெற வேண்டுமானால் ரோஹிங்கிய மக்கள்மீது பாரபட்சம் காட்டுவதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இது மிகவும் முக்கியமான காரியம்.

நான் ஒரு ரோஹிங்கிய இனத்தவராக இருந்திருந்தால் நான் பிறந்த இடத்தில் வாழ்வதையே விரும்புவேன். ஆனால் எனது அரசு என்னை காப்பதையும் மக்கள் என்னை சரிவர நடத்துவதையும் உறுதி செய்துகொள்வேன். இது ஏன் முக்கியம் என்றால் ஜனநாயக பாதைக்கு திரும்புவதற்கு ரோஹிங்கிய மக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டிய அம்சம் ஆகும்” என்று கூறினார்.