லக்ஷபான வாழைமலை காட்டுத் தீ ஹெலிகொப்டர் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது
இலங்கையின் மலையகத்தின் நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவனொளிபாதமலைக்கு சொந்தமான லக்ஷபான வாழைமலை பிரதேச காட்டுப்பகுதியில் தீ பரவியுள்ளது.
நேற்று இரவு பரவிய தீ காரணமாக குறித்த காட்டுப்பகுதியில் சுமார் கிட்டதட்ட 20 ஏக்கர் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
யாராவது விஷமிகள் தான் இப்பகுதிக்கு தீ வைத்திருப்பதாக நல்லதண்ணி பொலிஸார் சந்தேகப்படுகின்றனர்.
ஆனால் இன்றைய தினமும் குறித்த காட்டுப்பகுதியில் தீ பரவிய வண்ணமே காணப்பட்டது.
பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து தீயை அணைக்க முயற்சி செய்த போதிலும் தீயை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் நுவரெலியா மாவட்ட செயலாளர் திருமதி. எலன் மீகஸ்முல்லவின் பணிப்பின் பேரில் விமானப் படையினரின் உதவி பெறப்பட்டு எம்.ஐ. 17 ஹெலிகொப்டர் மூலம் தீயை அணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கு இராணுவத்தினரின் உதவியும் கிடைத்தமை குறிப்பிடதக்கது.