செய்திகள்

லசந்த கொலையின் சூத்திரதாரி கோதாபாய ராஜபக்‌ஷவே: அம்பலப்படுத்துகிறார் மேர்வின்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரினால் இழைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பான அதிர்ச்சிகரமான பல தகவல்களை முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா வெளியிட்டுள்ளார்.

அவர்கள் இருவர் தொடர்பாக கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடுகளை நேற்று சனிக்கிழமை பதிவு செய்துள்ள மேர்வின் சில்வா அது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு;

கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு முன்னால் என்னால் தவறான வசனங்கள் கூறப்பட்டிருந்தன. உண்மையில் அதெல்லாம் நானாக நினைத்து கூறியதில்லை. எனது கோப சுபாவத்தால் கூறியது. அது தொடர்பாக நான் முழு ஊடகங்களிடமும் மன்னிப்பை கேட்டுக்கொள்கின்றேன்.

நான் பெலியத்தவைச் சேர்ந்தவன். சிறந்த சிங்கள பௌத்தன். என்னிடம் வைராக்கியம் கிடையாது. ஆனால் எனது சுபாவத்தை சீண்டிப்பார்த்தால் காயத்தை சந்திக்க நேரிடும். கடந்த மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பசில் ராஜபக்ஷவும் கோத்தாபய ராஜபக்ஷவும் என்னை சீண்டினர்.இதனால் அவர்களுக்கு எதிராக முறையிடவே செல்கின்றோம். அவர்கள் இருவரும் செய்த தவறுகளை மகிந்த ராஜபக்ஷவும் அறிவார்.

இந்நிலையில் இனி எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். ஆனால் நான் செத்தாலும் நரிபோன்று அல்ல சிங்கத்தைப் போன்றே சாவேன். நான் மரணத்துக்குப் பயமில்லை எனவும் தெரிவித்தார். இந்த நிலையில் குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் இவை குறித்து முறைப்பாடு செய்தபின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்;

இங்கு தனிப்பட்ட பழிவாங்கல் கிடையாது. நான் பெலியத்தவிலிருந்து முன்னாள் ஜனாதிபதியின் காரிலேயே வந்தேன். அப்படி வந்த என்னை அமைச்சுப் பதவியில் சரியாக செயற்பட இடமளிக்கவில்லை.

களனி பிரதேச சபையுடன் இணைந்து சதிகளைத் தீட்டி என்னை விரட்ட முயற்சித்தனர். இதன்போதே நான் என்னை தயார்படுத்திக்கொண்டேன்.

தற்போது குற்ற விசாரணை  திணைக்களத்துக்கு வந்ததுக்கு காரணங்கள் உண்டு. ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க, பாரதலக்ஷ்மன், ராகம லொக்கு சீயா ஆகியோரின் கொலை மற்றும் வெள்ளை வான் கலாசாரத்திற்கு பிரதான சூத்திரதாரி கோத்தாபய ராஜபக்ஷவே. அனைத்தும் அவருக்குத் தெரிந்தே நடந்துள்ளது. இதனை நான் பொறுப்புடன்  கூறுகின்றேன். இதனைத் தெரிவித்து எனது வாழ்க்கையே இல்லாது போனாலும் பிரச்சினையில்லை.

இந்நிலையில் என்னைப்பற்றி என்ன குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்கலாம். அப்படியொரு குற்றச்சாட்டும் எனக்கு கிடையாது என்றார்.

சியத ஊடக நிறுவனம் மீதான தாக்குதல் தொடர்பாக  மேர்வினிடம் கேட்கப்பட்டபோது, “அதுவும் கோதாபய ராஜபக்ஷவிற்குத் தெரியும். அதனை பொறுப்புத்தன்மையுடன் கூறிக்கொள்கின்றேன்” என்றார்.

பசில் ராஜபக்ஷ என்பவர் எம்முடன் பெலியத்தவில் ஒன்றாக இருந்தவர். ராஜபக்ஷக்களுக்கு அங்குள்ள மக்களும் முதலாளிகளுமே உதவி செய்தனர். ஆனால் இன்று டுபாயில் ஹோட்டல் உள்ளது. தனமல்விலவில் 20 ஏக்கர் பரப்பில் ஹோட்டல்  உள்ளது. அது அவரின் மாமாவின் மகனின் பெயரில் உள்ளது. மல்வானையில் 23 ஏக்கரில் வீடு உள்ளது. கம்பஹாவிலும் வீடு உள்ளது.

ஹோல்பேஸ் பங்குகள் அவரின் மனைவியிடம் இருக்கின்றது. என்னிடம் இன்னும் பல பைல்கள் உள்ளன. 600 கோடி திவிநெகுமவிலிருந்து பெறப்பட்டுள்ளது. இதற்கு சாட்சிகள் உள்ளன. மற்றையவர்கள் கூறப் பயம். நான் செத்தாலும் இதற்கு பயமில்லை.

எனது மகனுடன் மோதியது யோசித ராஜபக்ஷ. திஸ்ஸ எனும் கப்டனை கொண்டு எனது மகனைக் கொல்ல கொண்டுசென்றனர். மகன் அதிலிருந்து தப்பிக்கொண்டார். வெள்ளைக்காரன் ஒருவர் அடித்து மகன் காயமடைந்ததும் கோத்தாபய ராஜபக்ஷ மகனை அப்படியே சில மாதத்திற்கு வைத்திருங்கள் என குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு தெரிவித்திருந்தார்.சாட்சிக்கான சீ.சீ.ரி.வி. வீடியோக்ககளும் அழிக்கப்பட்டிருந்தன. இதற்கான சாட்சிகள் என்னிடம் இருக்கின்றன.

யுத்தத்தை முடித்துவைத்திருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முறையாக செயற்பட்டிருந்தால் மைத்திரிபால சிறிசேன அவருக்கு எதிராக வந்திருக்கமாட்டார். அவரை பசில் போன்றோர் துரத்திவிட்டனர் என்றும் மேர்வின் தெரிவித்துள்ளார்.