செய்திகள்

லசந்த கொலை தொடர்பாக விரைவில் கோத்தாவிடம் புலனாய்வுப் பிரிவு விசாரணை

‘சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடம் புலனாய்வுப் பிரிவினர் விரைவில் விசாரணை நடத்தவுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா அண்மையில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கோத்தாபய தொடர்பில் முறைப்பாடு செய்திருந்தார். லசந்த விக்கிரமதுங்க உள்ளிட்ட முக்கிய பலரின் கொலைகளுடன் கோத்தாபயவிற்கு தொடர்பிருப்பதாக மேர்வின் சில்வா குற்றப் பிரிவினரிடம் தெரிவித்ததை ஊடகங்களுக்கும் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் மேர்வின் சில்வா, ஆவணங்களுடன் முறைப்பாடு செய்திருந்தார். இதில் முக்கிய சிலரது பெயர்களைக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இந்த முறைப்பாடு தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரிடம் விரைவில் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தவுள்ளனர்.

லசந்த கொலை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடமும் முறைப்பாடு குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. லசந்த கொலையுண்ட தினம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தெங்குப் பொருள் ஏற்றுமதியாளர்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்ததாகவும் அப்போது ஜனாதிபதிக்கு வந்த தொலைபேசி அழைப்பிற்கு பதிலளித்த அவர் சற்று அமைதியாக இருந்தபின், தலைக்குப்பட்டு விட்டதா என வினவியதாக லசந்தவின் மனைவி சொனாலி சமரசிங்க தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.