செய்திகள்

லசந்த விக்கிரமதுங்க கொலையின் சூத்திரதாரி யார்? அம்பலமாகும் புதிய திடுக்கிடும் தகவல்கள்!

கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெஹிவளை, அத்திடிய பகுதியில் பட்டப்பகலில் நடுவீதியில் வைத்து அடித்துக் கொல்லப்பட்ட சன்டே லீடர் பத்திரிகையில் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்காவின் படுகொலை தொடர்பாக விசாரணை நடைபெறும் என புதிய அரசாங்கம் அறிவித்திருக்கும் அதேவேளையில், இந்தக் கொலை தொடர்பில் புதிய திடுக்கிடும் தகவல்கள் பல கசிந்துள்ளன.

2009 ஜனவரி 8 ஆம் திகதி காலை தனது காரில் அலுவலகத்துக்குச் சென்றுகொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள்களில் சென்ற ஒரு குழுவினரால் நடுவீதியில் பலர் பார்த்க்கொண்டிருக்கத்தக்கதாக லசந்த அடித்துக்கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். இந்தக் கொலை தொடர்பாக அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிந்திருந்தார் எனவும், சன்டே லீடர் பத்திரிகையை வாங்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் இப்போது புதிய தகவல்கள் கசிந்துள்ளன.

தன்னுடைய காரை தானே செலுத்திக்கொண்டு சென்ற போது தன்னை மூன்று மோட்டார் சைக்கள்களில் மர்ம நபர்கள் தொடர்ந்துவருவதை லசந்த தெரிந்துகொண்டார். உடனடியாகவே மூன்று பிரமுகர்களுக்கு அவர் தொலைபேசியில் அழைப்பை எடுத்துள்ளார். ஒருவர்: மகாராஜா கூட்டு நிறுவனங்களின் தலைவர். இரண்டாமவர் ஐ.தே.க. தவிசாளர் மலிக் சமரவிக்கிரம. மூன்றாவது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ.

இதில் முன்னைய இருவரிடமும் லசந்த பேச முடிந்தது. தன்னை இனந்தெரியாத நபர்கள் தொடர்ந்துவருவதாக அவர் அப்போது கூறியிருந்தார். இருந்தபோதிலும் மகிந்த ராஜபக்‌ஷவிடம் தொடர்புகொள்ள முடியவில்லை. மகிந்த பூஜை அறையில் இருப்பதாக அவரது உதவியாளர் பல முறை கூறினார். இதனால் மகிந்தவுடன் அவரால் பேச முடியாமல் போய்விட்டது. இருந்தபோதிலும் லசந்தவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தபோது மற்றொரு அமைச்சருடன் மகிந்த உரையாடிக்கொண்டிருந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் சி.ஐ.டி.யினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

சன்டேலீடர் பத்திரிகையை வாங்குவதற்காக 400 மில்லியன் ரூபாவை வங்கிகளிலிருந்து எடுத்தமை தொடர்பான தகவல்களும் இப்போது வெளியாகியுள்ளது. 100 மில்லியன் ரூபாவுக்கு சன்டே லீடர் பத்திரிகைக்கு வலை பேசப்பட்டிருந்த போதிலும், 400 மில்லியன் ரூபாவுக்கு பெறுவதாகக் கூறி நான்கு வங்கிகளில் கடன் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

ஏற்கனவே படுகொலைகள், ஊழல்கள் தொடர்பாக ஆரம்பமாகியுள்ள விசாரணைகள் முன்னைய ஆட்சியாளர்களுக்கு நெருக்கடிகளைக் கொடுக்கும் வகையில் இடம்பெற்றுவரும் அதேவேளையில் லசந்தவின் படுகொலையும் பெரும் நெருக்கடியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.