லண்டனில் நடைபெறும் ‘மாவீரன் பண்டாரவன்னியன்’ குறும்பட வெளியீடு
சாகித்திய ரத்தினா, காலம் சென்ற முல்லை மணி கலாநிதி வே.சுப்பிரமணியத்தின் படைப்பான வன்னி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் குறும்பட வெளியீடு சட்டத்தரணி சுப்பிரமணியம் ஸ்ரீகாந்தலிங்கத்தின் நெறியாள்கையில் எதிர்வரும் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் 8 மணி வரை ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெறுகிறது.
இந்த குறும்படத்தை இணுவையூர் அப்பாக்குட்டி நிலையம் தயாரித்து வழங்குகிறது. முல்லை மணி கலாநிதி வே.சுப்பிரமணியம் அவர்களுக்கான அஞ்சலி கூட்டமும் அன்றைய தினம் நடைபெறுகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே (1803) சூரியனே அஸ்தமிக்காத பிரித்தானிய சாம்ராச்சியத்தின் கூலிப்படைகளை புறமுதுகு காட்டி ஓடவைத்து வீரச்சமர்புரிந்த அடங்காத்தமிழன் வன்னி மண்ணின் இறுதிக்காவலன் மாவீரன் பண்டாராவன்னியனின் புகழை காவியமாக்கியதுடன் தமிழினத்தின் சாபக்கேடான எட்டப்பர்களையும் புல்லுருவிகளையும் மூன்று காலங்களுக்கும் பொருந்தும் வகையிலே காக்கைவன்னியன் என்ற பாத்திரத்தை படைத்து தனித்துவமான இடத்தை பெற்றவராக முல்லை மணி கலாநிதி வே.சுப்பிரமணியம் விளங்குகிறார்.





