செய்திகள்

லண்டனில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோவுடன் மங்கள பேச்சு

பிரித்தானியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வயரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இரு தரப்பு மற்றும் ஜெிவா விவகாரம் குறித்து இங்கு பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

லண்டனில் நடந்த இந்தச் சந்திப்பு பயனுள்ள சந்திப்பு என்றும், கொழும்பில் தாம் நடத்திய பேச்சுக்களின் தொடர்ச்சியாக அது நடத்தப்பட்டதாகவும், ஹியூகோ ஸ்வயர் தெரிவித்துள்ளார். கடந்தமாத இறுதியில் கொழும்பு வந்திருந்த ஹியூகோ ஸ்வயர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட அரசதரப்பினருடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார். அத்துடன், வடக்கு மாகாண முதலமைச்சர், ஆளுனரையும் அவர் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழக்கிழமை அமெரிக்க இராஜாங்கச் செயலர்  ஜோன் கெரியைச் சந்திக்கச் செல்லும் வழியில், பிரித்தானிய அரச உயர் மட்டத் தலைவர்களைச் சந்திப்பதற்காக மங்கள சமரவீர லண்டன் சென்றிருந்தார்.