செய்திகள்

லண்டன் கூட்டம் தொடர்பில் சம்பந்தன் தெளிவுபடுத்த வேண்டும்: சுரேஷ் கோரிக்கை

லண்டனில் நடைபெற்ற இரகசிய கூட்டம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். அந்த கூட்டம் தொடர்பில் ஊடகங்களில் பலவாறான செய்திகள் வெளிவர தொடங்கியுள்ளது எனவே அவர் அது தொடர்பில் தமிழ் மக்களுக்கு தெளிவு படுத்துவார் என நம்புகின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசு கட்சியின் வெளிநாட்டு விவகாரங்களுக்கு பொறுப்பானவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன், வெளிவிவகார அமைச்சர் , வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் புலம் பெயர் தமிழர்கள் இணைந்து லண்டனில் இரகசிய பேச்சு வார்த்தை ஒன்றை நடாத்தி வருவது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களின் உடனடி பிரச்சனைகள் மற்றும் தேர்தல் நிலைமைகள் தொடர்பிலையே வெளிநாட்டில் கூடி பேசுவதாக தமிழரசு கட்சியின் வெளிநாடு விவகாரங்களுக்கு பொறுப்பாக உள்ள சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மக்களின் பிரச்சனை தொடர்பில் பேசுவது என்றால் வடமாகாண முதலமைச்சர்,  அமைச்சர்கள், உறுப்பினர்கள் இருக்கின்றார்கள், அதே போன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் , அமைச்சர்கள், உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் அவர்களுடன் பேசுவதே சரியாக இருக்கும் ஆனால் அவர்களுக்கும் இந்த பேச்சு வார்த்தைக்கும் தொடர்பில்லை.

தேர்தல் தொடர்பாக பேசுவது என்றால் வெளிநாட்டில் போய் வெளிநாட்டவருடன் பேச வேண்டிய தேவை என்ன ? தேர்தல் நடக்க போவது இலங்கையில் அது தொடர்பில் இலங்கையில் தான் பேச வேண்டும். எம்மை பொறுத்தவரை தமிழ் மக்களின் உடனடி தேவைகள் மற்றும் தேர்தல் நிலைமைகள் குறித்து வெளிநாட்டில் பேசுகின்றோம் என்பது ஒரு ஏமாற்று வேலை .

இதற்கு முன் சிங்கப்பூரில் ஒரு கூட்டம் நடைபெற்றது அந்த கூட்டமும் இரகசிய கூட்டம் அதனை தொடர்ந்து இங்கிலாந்தில் நடக்கும் இந்த கூட்டமும் இரகசிய கூட்டம். சிங்கபூர் கூட்டம் தொடர்பில் கூட்டமைப்புக்கு தெரிவிக்கவில்லை அந்த கூட்டம் முடிந்த பின்னரும் ஒன்றும் தெரிவிக்கவில்லை

இந்த நிலையில்  கூட்டமைப்பு சார்பாக கலந்து கொண்டதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் சார்பில் எவரையும் எந்த பேச்சு வார்த்தைக்கும் அனுப்பவில்லை. தமிழ் மக்களின் உடனடி பிரச்சனைகள் மற்றும் தேர்தல் நிலைமைகள் என்பது பட்டவர்த்தமான விடயம் அதில் இரகசியம் காக்க எதுவுமில்லை

அடுத்தது மூன்றவதாக துபாயில் பேச போறதாகவும் ஊடக வாயிலாக் அறிக்ன்றோம் தற்போதே இந்த இரகசிய கூட்டம் தொடர்பில் ஊடகங்களில் பலவாறாக செய்திகள் வெளி வர தொடங்கியுள்ளது. எனவே இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என மேலும் தெரிவித்தார்.