பிளவுபடாத ஐக்கிய இலங்கையை கட்டி எழுப்புவதற்கான பற்றுறுதியை வெளிப்படுத்தி புலம் பெயர் அமைப்புக்கள் பிரகடனம்ஒன்றை செய்யக்கூடும்: பாராளுமன்றத்தில் மங்கள
லண்டனில் கடந்த வாரம் தாங்கள் நடத்திய கலந்துரையாடல்கள் மற்றும் முயற்சிகளின் பயனாக , இலங்கையுடன் முன்னர் விரோத மனப்பான்மையை கொண்டிருந்த புலம் பெயர் அமைப்புக்கள் வன்முறையைக் கைவிட்டு பிளவுபடாத ஐக்கிய இலங்கையை கட்டி எழுப்புவதற்கான தமது பற்றுறுதியை வெளிப்படுத்தி பிரகடனம் ஒன்றை அனேகமாக செய்யக்கூடும் என்று இலங்கையின் வெளி நாட்டமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருக்கிறார்.
பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டதாக கூறி கடந்த அரசினால் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தனை நபர்களின் பெயர்களையும் இந்த கூடத்தில் மீளாய்வு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
நேற்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் நிமால் ஸ்ரீ பால டி சில்வா லண்டன் சந்திப்பு தொடர்பில் மங்கள சமரவீர விளக்கமளிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். இது தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் பதில் அளித்தபோது இவ்வாறு தெரிவித்த சமரவீர, இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ . சுமந்திரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையை சேர்ந்த சுரேன் சுரேந்திரன் ஆகியோருடன்
நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் தென் ஆபிரிக்கா மற்றும் சுவிசர்லாந்து ஆகிய நாடுகளின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.
குற்றம் சுமத்தப்பட முடியாதவிடத்து பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பது குறித்தும் தாம் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ தெரியாமல் லண்டன் சந்திப்புக்கள் நடைபெறவில்லை என்றும் எல்லா விடயங்களும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டே நடந்ததாகவும் அவர் கூறினார்.