செய்திகள்

‘லிங்கா’ திரைப்பட வழக்கு: ரஜினி ஆஜராக உத்தரவு

லிங்கா திரைப்படம் குறித்த வழக்கில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரை சின்னசொக்கிகுளத்தைச் சேர்ந்தவர் ரவிரத்தினம். இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 2014 டிசம்பரில் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருந்த விவரம்:

முல்லைப் பெரியாறு அணை, அதைக் கட்டிய பென்னிகுவிக் வரலாற்றை அடிப்படையாக வைத்து “முல்லைவனம் 999′ என்ற திரைப்படத்தை இயக்கிவருகிறேன். அந்தக் கதையைத் திருடி “லிங்கா’ திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

ஆகவே, திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்கவேண்டும். கதையைத் திருடிய “லிங்கா’ திரைப்படக் குழுவினர் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, மனுதாரரின் முக்கிய கோரிக்கையானது பதிப்புரிமை சம்பந்தப்பட்டது. ஆகவே, மனுதாரர் கோரிக்கைக்கு பதில் கூறமுடியாது. மனுதாரர் சிவில் நீதிமன்றத்தை அணுகி மனு செய்யலாம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

நீதிமன்ற அறிவுரைப்படி, ரவிரத்தினம் மதுரை மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், “லிங்கா’ படக் கதையானது, நான் (ரவிரத்தினம்) திரைக்கதை எழுதி தயாரித்து வரும் “முல்லைவனம் 999′ படத்தினுடையது ஆகும். ஆகவே, இரண்டு கதையும் ஒன்றுதான் என உத்தரவிடவேண்டும்.

இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை “லிங்கா’ படக்குழுவினர், அப்படத்தின் கதை தங்களுடையது எனக் கூறத் தடை விதிக்கவேண்டும். எனது (ரவிரத்தினம்) கதையைத் திருடியதற்காக இழப்பீடு வழங்கவேண்டும் எனக் கூறியிருந்தார்.

மனுவை நீதிபதி சரண் புதன்கிழமை விசாரித்தார். அப்போது “லிங்கா’ படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பிட உத்தரவிட்டார். மேலும், மனு விசாரணையை மார்ச் 16-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.