செய்திகள்

“லிங்கா’ பட விவகாரம்: கலைப்புலி தாணு விளக்கம்

“லிங்கா’ திரைப்படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக படம் நடித்துத் தருவதாக ரஜினிகாந்த் ஒருபோதும் வாக்கு தரவில்லை என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு கூறினார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்கிழமை கலைப்புலி எஸ்.தாணு கூறியது:

“லிங்கா’ திரைப் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் விநியோகஸ்தர்களுக்கு ரூ.12.50 கோடி வழங்கப்பட்டது.

உரிய முறையில் நஷ்ட கணக்கு காட்டிய விநியோகஸ்தர்களுக்கு இதுவரை படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷிடமிருந்து ரூ. 6.19 கோடி வந்துள்ளது. அதை பிரித்துக் கொடுத்துள்ளோம்.

இந்நிலையில், மீதமுள்ள ரூ. 6.31 கோடி தொகை வந்தவுடன் கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்ட விநியோகஸ்தர்களுக்கு பிரித்து அளிக்கப்படும். இன்னும் சில தினங்களில் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். “லிங்கா’ படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் படம் நடித்து தருவதாக ரஜினி ஒருபோதும் வாக்கு தரவில்லை என்றார் தாணு.

இந்தச் சந்திப்பின்போது நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் ஆகியோர் உடனிருந்தனர்.