செய்திகள்

லிங்கா விவகாரம்: தயாரிப்பாளர் தாணு மீது விநியோகஸ்தர் சிங்காரவேலன் பாய்ச்சல்

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘லிங்கா’ படம் கடந்த டிசம்பர் 12ம் தேதி வெளியானது. மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே வெளியான இப்படம் ரசிகர்களை திருப்தி படுத்த தவறியது. வசூலிலும் ஏமாற்றத்தையே தந்தது.இதனால் இப்படத்தை அதிக விலை கொடுத்து வாங்கி வெளியிட்ட வினியோகஸ்தர்களுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது. ரூ.33 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் அந்த தொகையை தர வேண்டும் என்றும் வலியுறுத்தி விநியோகஸ்தர்கள் ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரதம் இருந்தார்கள். ரஜினிக்கு எதிராக பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர்.

நிலைமையை உணர்ந்த ரஜினி இப்பிரச்னையில் நேரடியாக தலையிட்டார். அவர் சார்பில் விநியோகஸ்தர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார். தயாரிப்பாளர் சங்கமும் இதில் பங்கேற்றது. . பேச்சு வார்த்தை முடிவில் ரூ.12½ கோடி நஷ்ட ஈடாக விநியோகஸ்தர்களுக்கு அளிக்க முடிவானது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு விவியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இந்த தொகை வழங்கப்பட்டுவிட்டது என்று கூறப்பட்டது. ஆனால் ரூ.5 கோடி தான் தரப்பட்டது என்றும், மீதி தொகையை இன்னும் தரவில்லை என்றும் வினியோகஸ்தர்கள் குற்றம் சாட்டினர். மேலும் தங்களுக்கு ரஜினி ஒரு படத்தில் நடித்து தருவார் என உறுதி மொழி அளிக்கப்பட்டது.ஆனால் அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது.

இதையடுத்து ரஜினிக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்றும் இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது என்றும் விநியோகஸ்தர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த விவகாரத்தில் விநியோகஸ்தர் சிங்காரவேலனை கண்டித்து, சிங்காரவேலன் விளம்பரப் பிரியராக இருக்கிறார் என்று தயாரிப்பாளர் தாணு கூறியிருந்தார். மேலும் பல்வேறு கேள்விகளையும் அடுக்கினார்.

இந்நிலையில் தாணுவின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக விநியோகஸ்தர் சிங்காரவேலன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

லிங்கா வெளியீட்டின் மூலம் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு 37.5 கோடி ரூபாய் ஆகும். இழப்பீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் சுமுகமான உடன்பாடு ஏற்பட்டு, டெபாசிட் அடிப்படையில் படம் திரையிட்டவர்களுக்கு கொடுப்பதற்காக 12.5 கோடியும், ரஜினிகாந்த் படம் நடித்து தருவார் என்றும் உறுதி கூறியதால் ஒத்து கொண்டு பணத்தை பெற்றுக் கொள்வது என முடிவெடுத்தேன். அதன் அடிப்படையில் மார்ச் 20ம் தேதி அந்த பணம் தங்கள் வசம் வந்துவிட்டதாக கலைப்புலி தாணு மீடியாவிலும் தெரிவித்தார். அன்று இரவே விநியோகஸ்தர்கள் சிலருக்கு முன்பணமாக தலா ரூபாய் 35 லட்சம் தருவதாக உறுதி கூறப்பட்டு அவ்வாறு கொடுக்கவும்பட்டது. ஆனால் எஞ்சிய தொகை பல நாட்களுக்கு பிறகு, மிகுந்த அழுத்தத்திற்கு பின்னர் வழங்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் அந்த தொகை எங்கு சென்றது என்பதை தாணு விளக்க வேண்டும்

4 ஏரியாக்களுக்கு மட்டும் பணத்தை கொடுத்துவிட்டு மீதி ஏரியாக்களுக்கு பொய்யான காரணம் கூறி பணம் கொடுப்பதை இழுத்தடிப்பது ஏன் என்பதையும் தெளிவுப்படுத்த வேண்டும். திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் இணைந்து வந்து பணத்தை பெற வேண்டும் என்று கூறும் தாணு, 4 ஏரியாக்களுக்கு பணம் கொடுத்தபோது அந்த விதியை பின்பற்றாதது ஏன் என்பதை தெரிவிக்க வேண்டும்.

விளம்பரத்திற்காக சிங்காரவேலன் பத்திரிகையாளர்களை சந்திப்பதாக கூறும் தாணு ஒரு விளம்பர பிரியர், வாய்ச்சொல் வீரர் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கடமை எனக்கு இருப்பதால் ஒரு நிகழ்வை கூற கடமைப்பட்டுள்ளேன். 2009ம் ஆண்டு அவர் தயாரித்த ‘கந்தசாமி’ பட வெளியீட்டின்போது பேசிய தாணு, தான் ஒரு கிராமத்தை தத்தெடுத்து இருப்பதாகவும், அந்த கிராமத்திற்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை செய்து தருவதாகவும், அந்த கிராமத்தில் அமைந்துள்ள தன்னுடைய திருமண மண்டபத்தில் ஏழைகள் இலவசமாக திருமணம் நடத்தக் கொள்ளலாம் எனவும அறிவித்திருந்தார்.

இந்த 6 வருட காலத்தில் அந்த கிராமத்திற்கு இவர் என்னென்ன உதவிகள் செய்துள்ளார் என்பதையும், எத்தனை ஏழை ஜோடிகளுக்கு அங்கு இலவச திருமணம் நடத்திக் கொள்ள அனுமதி அளித்தார் என்பதையும் தெரிவித்தால் அடியேனும் சந்தோஷப்படுவேன் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

தலைவலியும் நோவும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள். ‘ஆளவந்தான்’ படத்தில் இழப்பு ஏற்பட்டபோது ‘ஆளவந்தான் என்னை அழிக்க வந்தான்!’ என்று பத்திரிகைகளில் நீங்கள் பேட்டி கொடுத்ததைபோல லிங்காவில் இழப்பு ஏற்பட்டதற்கு மீடியாவின் துணையை நாங்கள் நாடுவது உங்களுக்கு ஏன் வருத்தத்தை தருகிறது?

லிங்கா விவகாரத்தில் கணக்கு வாங்கியது முதல் பணம் செட்டில் செய்வது வரை திருப்பூர் சுப்பிரமணி ஈடுபட்டிருக்கும் நிலையில், அவருக்கும் எங்களுக்கும் நடந்து வரும் பிரச்சனையில் மரியாதைக்குரிய தாணு தலையிட வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். சினிமாவில் ஜொலித்துவிட்டு பின்னர் நலிந்து போனவர்களை தேடிப்பிடித்து அவர்களுக்காக ஒரு படம் நடித்து அவர்களை வளப்படுத்திய ரஜினி, அவர் படத்தை வெளியிட்டு நஷ்டமடைந்த எங்களுக்கு உதவாமல் இருப்பாரா என்ன?

திருப்பூர் சுப்பிரமணி போன்றவர்கள் தடுத்ததால் தான் எங்களுக்கு வரவேண்டிய தொகை தாமதமாக வந்தது என்பதை தமிழ்த் திரையுலகமே அறியும்.

விநியோகஸ்தர்களின் வலி தெரிந்தவர் தாணு என்பதால், இந்த விஷயத்தில் தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எங்கள் உணர்வை கொச்சைப்படுத்த வேண்டாம் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். சீப்பை ஒளித்துவிட்டால் திருமணம் நின்றுவிடும் என்ற பழைய பஞ்சாங்கத்தை தூசு தட்ட வேண்டாம். உங்களால் ஆர்.கே.வி ஸ்டூடியோவை வேண்டுமானால் பணியவைக்க முடியும். நூற்றுக்கணக்கான திரையரங்க உரிமையாளர்களையும் துடிப்போடு செயல்படும் விநியோகஸ்தர்களயும் உங்களால் பணியவைக்க முடியாது.

எங்களை புண்படுத்தும் வகையில் தங்களிடமிருந்து தொடர்ந்து அறிக்கைகள் வருமாயின் அதனை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் வகையில் பதில் அறிக்கைகள் தரப்படும். தலைவர் பதவி யாருக்கும் நிரந்தரமல்ல என்று தெரிவித்திருக்கிறார்.