செய்திகள்

‘லிங்கா’ வெளியிடுகிறது ஈராஸ் நிறுவனம்: 16ம் தேதி இசை வெளியீடு

‘லிங்கா’ படத்தின் இசை 16ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. படத்தின் மொத்த வெளியீட்டு உரிமையையும் ஈராஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

ரஜினி, அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘லிங்கா’ படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நவம்பர் 9ம் தேதி வெளியாவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அன்றைய தினம் இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. இந்நிலையில், ‘லிங்கா’ படத்தின் மொத்த உரிமையையும் கைப்பற்ற செளந்தர்யா ரஜினிகாந்த் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து செளந்தர்யா ரஜினிகாந்த் எதுவும் கூறாமல் இருந்து வந்தார்.

தற்போது ‘லிங்கா’ தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என அனைத்து மொழிகளின் இசை மற்றும் வெளியீட்டு உரிமை என மொத்தத்தையும் கைப்பற்றி இருக்கிறது ஈராஸ் நிறுவனம். நவம்பர் 16ம் தேதி அன்று ‘லிங்கா’ தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பின் இசை வெளியீட்டு விழா மற்றும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.

ஈராஸ் நிறுவனத்தின் தென்னந்திய தலைவராக செளந்தர்யா ரஜினிகாந்த் பணியாற்றி வருவதால், அப்பா படத்தின் மொத்த உரிமையையும் கைப்பற்றி இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதுமட்டுமன்றி, படத்தின் மொத்த உரிமைக்கும் பெரும் விலை கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.