செய்திகள்

லொறி மீது பொலிஸ் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

பொலிஸாரின் சமிக்ஞையை மீறி நிறுத்தாமல் சென்ற லொறிமீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக மஹாஓயா பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.10 மணியளவில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களின் எல்லையிலுள்ள மஹாஓயா – அரந்தலாவையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அம்பாறை – மஹாஓயா வீதியில் நள்ளிரவில் பயணித்துக் கொண்டிருந்த லொறியை சோதனைக்காக நிறுத்துமாறு மங்களகம பொலிஸார் சமிக்ஞை செய்துள்ளனர். எனினும், பொலிஸாரின் உத்தரவை மீறி லொறி அதிவேகத்துடன் பொலிஸ் சோதனை சாவடியைக் கடந்து செல்லவே பொலிஸார் அடுத்ததாகவுள்ள அரந்தலாவ பொலிஸ் நிலையத்துக்கு நிறுத்தாமல் சென்ற லொறி குறித்து தகவல் வழங்கியுள்ளனர்.

அரந்தலாவ பொலிஸாரும் லொறியை நிறுத்துமாறு கூறவே அங்கும் லொறி நிறுத்தப்படவில்லை. உடனடியாக லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அப்போதும் லொறி நிறுத்தாமல் பயணித்துள்ளது. பின்னர், பொலிஸார் தேடுதல் நடத்திய பொழுது அம்பாறை பொறகொல்ல விகாரைக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் லொறி காணப்பட்டுள்ளது. லொறியில் சடலம் ஒன்றும் கிடந்துள்ளது.

எனினும், இறந்தவர் யாரென்ற விவரங்கள் தெரியவரவில்லை. சடலம் தற்போது மஹாஓயா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த லொறியில் சட்டவிரோதமான முறையில் மாடுகள் ஏற்றிச் செல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எனினும், கைவிடப்பட்ட லொறியில் மாடுகள் எவையும் மீட்கப்படவில்லை. இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.