செய்திகள்

வங்கதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: 77 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

வங்கதேசத்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணிக்கெதிராக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. இதில் முதல் 2 போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், இன்று மூன்றாவது மற்றும் கடைசி போட்டி மிர்புரில் நடைபெற்றது.

தொடரை இழந்த இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறுமா? என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டாஸை வென்ற வங்கதேசம், இந்திய அணியை பேட்டிங் செய்யும்படி கேட்டுக்கொண்டது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் நிதானமாக விளையாடி நம்பிக்கை அளித்தனர். ரோகித் சர்மா 29 ரன்களில் வெளியேறியபோதும், மற்றொரு துவக்க வீரர் ஷிகர் தவான் நிலைத்து நின்று விளையாடியதால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

இதற்கிடையே அணியின் ஸ்கோர் 114 ஆக இருந்தபோது அதிரடி வீரர் விராட் கோலி, 25 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அரை சதம் கடந்து முன்னேறிய தவான் 75 ரன்கள் எடுத்த நிலையில், விக்கெட்டை இழந்தார். அம்பதி ராயுடு தன் பங்கிற்கு 44 ரன்கள் சேர்த்தார்.
முந்தைய போட்டிகளைக் காட்டிலும் விறுவிறுப்பாக ஆடிய கேப்டன் தோனி, 77 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 69 ரன்கள் விளாசினார். 6-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரெய்னா 38 ரன்களில் ஆட்டமிழக்க, 50 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் எடுத்தது. வங்கதேசம் தரப்பில் மோர்தசா 3 விக்கெட்டுகளும், முஸ்தாபிசுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதையடுத்து 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச பேட்ஸ்மேன்களை இந்திய பந்துவீச்சாளர்கள் திணறடித்தனர். துவக்க வீரர்களான தமிம் இக்பால் 5 ரன்களில் குல்கர்னியிடம் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் ஆக்ரோஷமாக விளையாடிக்கொண்டிருந்த சவுமியா சர்க்கார் 40 ரன்கள் எடுத்த நிலையில் அவரது விக்கெட்டையும் குல்கர்னி கைப்பற்றினார்.

இதேபோல் ரெய்னா, அஷ்வின் ஆகியோரும் வங்கதேச பேட்ஸ்மேன்களின் ரன் வேகத்தை வெகுவாகக் கட்டுப்படுத்தியதுடன் விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். முஷ்பிகுர் ரகிம் (24), லித்தன் தாஸ் (34), சாகிப் அலி ஹசன் (20), சபிர் ரஹ்மான் (43), நசிர் உசைன் (32) ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுக்க, பின்கள வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால், 18 பந்துகள் மீதமிருந்த நிலையில் வங்கதேச அணி 240 ரன்களில் சுருண்டது. 77 ரன்களில் இந்தியா வெற்றி பெற்று, தொடர் தோல்விக்கு ஆறுதல் தேடிக்கொண்டது. இந்தியா தரப்பில் ரெய்னா 3 விக்கெட்டுகளும், குல்கர்னி, அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.