செய்திகள்

வங்காளதேசத்தில் இரு பஸ்கள் நேருக்குநேர் மோதல்: 12 பயணிகள் பலி – 50 பேர் காயம்

வங்காளதேசத்தில் இன்று இரு பஸ்கள் நேருக்குநேராக மோதிக் கொண்ட விபத்தில் 12 பயணிகள் பலியாகினர். சுமார் 50 பேர் காயமடைந்தனர்.இங்குள்ள தினஜ்பூர் பகுதியில் இருந்து ரங்பூர் பகுதியை நோக்கி சென்ற ஒரு பஸ்சும், ஷைலெட் பகுதியில் இருந்து தினஜ்பூர் பகுதியை நோக்கி வந்துகொண்டிருந்த மற்றொரு பஸ்சும் ரங்பூர்-தினஜ்பூர் நெடுஞ்சாலையில் இன்று காலை 11 மணியளவில் பயங்கரமாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பத்து பயணிகள் பலியாகினர்.
காயமடைந்த ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் ரங்பூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் உயிரிழந்ததையடுத்து, இவ்விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
மிகவும் மோசமான சாலைகள் மற்றும் சரியான பராமரிக்கப்படாத வாகனங்களால் வங்காளதேசத்தில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் மட்டும் சுமார் பத்தாயிரம் மக்கள் பலியாகி வருவது குறிப்பிடத்தக்கது.