செய்திகள்

வங்காளதேசத்தில் இஸ்லாமியத்திற்கு எதிராக பேஸ்புக்கில் கருத்து கூறிய சட்ட மாணவர் கொலை

வங்காளதேசத்தில் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக பேஸ்புக்கில் கருத்து பதிவுசெய்த சட்டமாணவர் நிஜாமுதீன் சமாத் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாணவர் நிஜாமுதீன் மதசார்பின்மை தொடர்பான தனது கருத்துக்களை பதிவுசெய்ததை தொடர்ந்து டாக்காவில் கொல்லப்பட்டு உள்ளார்.

டாக்காவில் போக்குவரத்து சந்திப்பு பகுதியில் வாளால் வெட்டி பின்னர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. மாணவர் நிஜாமுதீன் வங்காளதேசத்தில் உள்ள மதசார்பின்மை குழுவை சேர்ந்தவர் என்றும் தெரியவந்து உள்ளது. வங்காளதேசத்தில் மதத்திற்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் தொடர்ந்து கொலைசெய்யப்படும் நிலையானது நீடித்து வருகிறது. இப்பிரச்சனையை சரியாக கையாளுவதில் வங்காளதேச அரசு தோல்வி அடைந்துவிட்டது என்று மதசார்பற்றவர்கள் குற்றம் சாட்டிஉள்ளனர்.

1370

டாக்காவில் போக்குவரத்து சந்திப்பில் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர், வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நிஜாமுதீனை வெட்டிவிட்டு, பின்னர் துப்பாக்கியால் சுட்டு உள்ளனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை போலீஸ் தெரிவிக்கவில்லை, இருப்பினும், மதசார்பிலான தாக்குதலா என்பதையும் உறுதிசெய்யவில்லை…  மாணவர் ஜெகன்நாத் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர், தொடர்ந்து மதவெறியர்களுக்கு எதிராக பேஸ்புக்கில் கருத்துக்களை பதிவுசெய்து வந்து உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. வங்காளதேசத்தில் கடந்த வருடம் மட்டும் மதசார்பின்மை கருத்துக்களை வெளியிட்ட சுமார் 4 பேர் பெரிய வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.