செய்திகள்

‘வசந்தம்’ என்ற சொல் மகிந்த ஆட்சியில் ஆக்கிரமிப்பைக் குறித்தது: புதுவருட நிகழ்வில் முதலமைசச்சர்

எம்மை சுதந்திரம் அற்ற மனிதக் கூட்டமாக செயற்படவைத்து எம்மைச் சுற்றி இராணுவச் சூழலைத் தொடர்ந்து வைத்திருப்பதை இனியாவது நீக்கவேண்டும் என  வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.இந்தியத் தூதரகம் மற்றும் வடக்கு மாகாண கல்வி  அமைச்சு ஆக்கியன இணைந்து நடத்திய “மலரட்டும் புதுவசந்தம்’ என்னும் புத்தாண்டு இசை நிகழ்வு நேற்று நெல்லியடி மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து பேசிய முதலமைச்சர்  வடக்கின் வசந்தம் என்ற பெயரின் கீழ் மத்திய அரசு மாகாணத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்து அரசியல் செயற்பாட்டை கடந்த புது வருடம் நடத்தியதாக நினைவுபடுத்தினார்.

அன்று வசந்தம் என்னும் சொல் ஆக்கிரமிப்பை காட்டும் ஒரு சொல்லாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். உண்மையில் புதிய வசந்தம் ஒன்று மலர வேண்டுமானால் தேவையற்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு  எம்மீது திணிக்கப்பட்டிருக்கும் அடிமைத்தனங்கள் நீக்கப்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

மத்திய அரசு மாகாண அரசுமீது திணித்துள்ள இராணுவ, அரச கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு நாம் நாமாக வாழவேண்டிய ஒரு சூழல் ஏற்பட வேண்டும் என்றும் அதற்காக பிரார்த்திப்போம் என்றும் வட மாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.