செய்திகள்

வடகிழக்கில் 20 ஆசனங்களுக்கு மேல் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெறும் -பொன்.செல்வராசா

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடகிழக்கில் 20க்கும் மேற்பட்ட ஆசனங்களைப்பெற்று பலமுள்ள கட்சியாக மாறும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

நேற்று இரவு மட்டக்களப்பு, புகையிரத வீதியில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதானது தமிழ் தேசிய கூட்டமைப்பினால் எதிர்பார்க்கப்பட்ட ஒரு விடமாகவே பார்க்கப்படுகின்றது. 20வது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்திற்கு கொண்டுவருவதற்கு முதல் பாராளுமன்றம் கலையவேண்டும்,பழைய விகிதாசார முறைப்படி தேர்தல் நடைபெறவேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட சிறுபான்மைக்கட்சிகள் மற்றும் சிறு கட்சிகள் உறுதியாக இருந்தன.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை பொறுத்தவரையில் பாராளுமன்றம் கலையவேண்டும் என்பதில் நம்பிக்கையுடன் இருந்தோம். ஆகவே இது தொடர்பில் நாங்கள் அலட்டிக்கொள்ளவும் இல்லை,அதிர்ச்சியடையவும் இல்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை பொறுத்தவரையில் தேர்தல் காலத்தில் மட்டும் மக்களிடம் செல்வதில்லை.நாங்கள் தொடர்ச்சியாக மக்களை சந்தித்துவருகின்றோம்.அவர்களின் பிரச்சிகளை ஆராய்ந்து முடிந்தவரையில் தீர்த்துவருகின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் இடம்பெற்ற அத்துமீறிய குடியேற்றங்கள் மற்றும் அம்பாறை மாவட்ட பெரும்பான்மையினத்தின் அத்துமீறிய பயிர்ச்செய்கைகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தது.அண்மையில் கூட அத்துமீறிய குடியேற்ற வாசிகளுக்கு வாக்காளர் விண்ணப்பங்கள் கூட வழங்கப்பட்ட நிலையில் அவற்றினை நிராகரிக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே குரல்கொடுத்துவந்தது.

கடந்த காலத்தில் இருந்த அராஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு சிறுபான்மைக்கட்சிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டன.அத்துடன் கடந்த கால ஆட்சியில் கபளீகரம் செய்யப்பட்ட வடக்கில் உள்ள காணிகள் தற்போது படிப்படியாக வழங்கப்பட்டுவருகின்றன.ஏற்கனவே ஆயிரம் ஏக்கர் காணிகள் வடமராட்சியில் வழங்கப்பட்டுள்ளன.அதேபோன்று சம்பூர் பகுதியில் மீளகுடியேற்றத்திற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அதேபோன்று கடந்த காலத்தில் கைதுசெய்யப்பட்ட தமிழ் இளைஞர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.புதிய அரசாங்க காலத்தில் புதிய ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சில நடவடிக்கைகள் இவையென குறிப்பிடலாம்.

2010ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் தமிழர்களுக்கு யார் தலைவர்கள் என்று வெளிக்காட்டியது.2009ஆம் ஆண்டு போர் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழர்களின் தலைவர்கள் யார் என்ற கேள்விக்குறி இருந்த காலத்தில் 2010ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை அமோக வெற்றிபெறச்செய்தனர்.அதன்பிறகு வந்த அனைத்து தேர்தல்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை தமிழ் மக்கள் அமோக வெற்றிபெறச்செய்தனர்.

இதேபோன்று எதிர்வரும் பொதுத்தேர்தலிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றியை பெறும்.தமிழ் மக்களுக்கு கைகொடுக்கும் கட்சியாக இந்த நாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே உள்ளது.

2010ஆம்ஆண்டு 14 பிரதிநிதிகள் வெற்றிபெற்று பாராளுமன்றம் சென்றோம்.இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 20க்கும் மேற்பட்ட ஆசனங்களைப்பெறும் என்ற நம்பிக்கையுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் எதிர்வரும் காலத்தில் அமையவுள்ள தேசிய அரசாங்கத்தில் நாங்கள் அதிகளவான உறுப்பினர்களைக்கொண்டிருந்தால் எங்களது கோரிக்கையினை வென்றெடுக்க கூடியதாக இருக்கும்.

இம்முறை நாங்கள் பலம்வாய்ந்த கட்சியாக இம்முறை வருவோம். புரையோடிப்போயுள்ள எமது இனப்பிரச்சினைக்கான தீர்வினை இந்தமுறை வென்றெடுப்பதற்கு தயாராகவிருக்கின்றோம்.

அமையவுள்ள புதிய அரசாங்கத்தில் எமது அபிலாசைகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் வசதியும் கிடைக்கும்.