செய்திகள்

வடகிழக்குப் பகுதி மக்களின் கலாச்சார சமூகக் கட்டமைப்பு ஒழுங்கு கெட்டு இருப்பதனையே வித்தியாவின் படுகொலை காட்டுகிறது

புங்குடுதீவில் உயர்தர மாணவி படுகொலை செய்யப்பட்டமை வடகிழக்குப் பகுதித் தமிழ்மக்களின் கலாசார சமூகக் கட்டடமைப்பு ஒழுங்கு கெட்டு இருப்பதனை எடுத்துக் காட்டுவதாகவுள்ளது.

இவ்வாறு புங்குடுதீவில் மாணவி வித்தியா கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கோண்டாவில் மக்கள் நலன் பேணும் அமைப்பு இன்று சனிக்கிழமை(16.5.2015) வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமைப்பின் தலைவர் செ.ஜெகபாலனின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புங்குடுதீவில் உயர்தர மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டதனை மக்கள் நலன் பேணும் அமைப்பினராகிய நாங்கள் மிகவும் கண்டிக்கின்றோம்.

ஒரு புறம் வாள்வெட்டு, குடிபோதை என்றும் மறுபுறம் வன்புணர்ச்சி, கொலை என்றும் தமிழ்மக்களின் எதிர்காலச் சமூகம் சீரழிவதற்கான நடவடிக்கைகளாகவே பார்க்க முடிகின்றது.

எனவே, இவ்வாறான கொடூரம் புரிபவர்களைச் சமூகத்திற்கு அடையாளம் காட்டுவதுடன் உடனடியாக உச்ச பட்சத் தண்டணை வழங்க வேண்டும் என்றும் மக்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன் இவ்வாறான கொடூரம் புரிபவர்களுக்கு ஆதரவாக எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராகாமல் மக்களின் பிரதிபலிப்பையும், மனிதநேயத்தையும் வெளிக்காட்ட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கின்றோம் என்றுள்ளது.

IMAGE0015 (1)