செய்திகள்

வடகிழக்கு மாநிலங்களில் இராணுவத்தினரை உஷார் செய்துள்ள இந்தியா

இந்திய ராணுவத்தினரை சுட்டுக்கொன்றுவிட்டு மியான்மர் நாட்டுக்குள் ஒளிந்திருந்த தீவிரவாதிகளை, அந்நாட்டுக்குள் புகுந்து இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதல்களை நடாத்தி சுட்டுக்கொன்றது. கடந்த செவ்வாய் கிழமை இடம்பெற்ற இத்தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ வட்டார தகவல்கள் தெரிவித்தன. இதன் போது தமது படையை இழந்த நாகா தேசிய சோஷலிச கவுன்சில் கப்லாங் (என்.எஸ்.சி.என்.-கே) தீவிரவாத இயக்கம் இந்தியாவிற்கு நுழைந்து, பழிவாங்கும் விதமாக தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது எனத் தகவல்கள் வெளியாகி உள்ளதையடுத்து இந்தியா தனது வடகிழக்கு மாநிலங்களில் பலத்த பாதுகாப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் இராணுவத்தினரையும் உஷார் படுத்தியுள்ளது.

உளவுத்துறைக்கு கிடைத்த தகவல்களின்படி, இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதலில் கதிகலங்கிஉள்ள என்.எஸ்.சி.என்.-கே., பி.எல்.ஏ., உல்பா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் பழிவாங்கும் விதமாக இந்தியாவிற்குள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பை அதிகரிக்க கூடுதல் படைகளை குவிக்க இந்தியா தரப்பில் திட்டமிடப்பட்டு உள்ளது. டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்ட தலைவர்கள் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி மனோகர் பாரிக்க, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், துணை ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் பிலிப் காம்போஸ் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

செவ்வாய்கிழமை அதிகாலை மியான்மரில் ராணுவம் நடத்திய தாக்குதலில் திருப்தி அடைந்து உள்ள மத்திய அரசு, இதுபோன்ற நடவடிக்கை எதிர்க்காலங்களில் தேவைப்பட்டது என்றால் உத்தரவிடப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.