செய்திகள்

வடக்கின் பெரும் போர் ஆரம்பம்: பரியோவான் கல்லூரி 300/7; மத்திய கல்லூரி 9/0

வடக்கின் மாபெரும் போர் என்று வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரி மற்றும் யாழ் . பரியோவான் கல்லூரி ஆகியவற்றுக்கிடையிலான 109ஆவது கிரிக்கெட் போட்டி யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமானது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணித்தலைவர் பத்திநாதன் நிரோஜன் முதலில் பரியோவான் கல்லூரியை துடுப்பெடுத்தாடுவதற்கு கேட்டுக்கொண்டார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய பரியோவன் கல்லூரி 88 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்று தனது ஆட்டத்தை இடைநிறுத்தியது. இதன்போது அபாரமாக விளையாடி, பரியோவான் கல்லூரியின் செபமாலைப்பிள்ளை ஜெனிபிளமிங் சதமடித்தார். வடக்கின் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் கடந்த 2005 ஆம் ஆண்டு சென்.ஜோன்ஸ் அணியின் ஏ.மயூரதன் 122 ஓட்டங்களைப் பெற்றதன் பின்னர் எவரும் சதம் எதுவும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிரடியாக ஆடி ஜெனி பிளமிங் 196 பந்துகளில் 19 பவுண்டரிகள் அடங்கலாக 107 ஓட்டங்களைப் பெற்று, ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார். ஆரம்பத்தில் விக்கெட்டுக்கள் எதுவும் கொடுக்காமல் ஓட்டங்கள் சேர்த்த பரியோவான் கல்லூரி பின்னர் விக்கெட்டுக்களை பறிகொடுக்கத் தொடங்கியது. பின்னர் 88 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்று தனது ஆட்டத்தை இடைநிறுத்தியது.

சஜீந்திரன் கபில்ராஜ் 50, அருளானந்தம் கானாமிர்தன் 33, பரமானந்தம் துவாரகசீலன் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி சார்பாக, சிவராசா மதுசன் 22 ஓவர் பந்துவீசி 71 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், கணேசலிங்கம் நிதுசன், சிவபாலசுந்தரம் அலன்ராஜ்,சதாகரன் திரேசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

தொடர்ந்து துப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி விக்கெட் இழப்பு எதுவும் இன்றி 9 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

3 நாட்கள் நடைபெறும் இந்த பெரும் போட்டியில் ஒவ்வொரு நாளும் 90 ஓவர்கள் வீசப்படும்.

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் பரியோவான் கல்லூரி 34 போட்டிகளிலும், மத்திய கல்லூரி 27 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. 39 போட்டிகள் சமநிலையிலும், 7 போட்டிகளின் முடிவுகள் தெரியாத நிலையிலும், 1 போட்டி கைவிடப்பட்டும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Jaffna-Central


யாழ் மத்திய கல்லூரி அணி: இடமிருந்து வலம்- இருப்பவர்கள் : வி. ஆர். வி தினேஷ் ( விளையாட்டு பொறுப்பாசிரியர்), பத்திநாதன் நிரோஜன் ( அணித் தலைவர்), திரு. எஸ். கே . எழில்வேந்தன் ( அதிபர்), சிவராசா மதூசன் ( உப அணித் தலைவர்), எஸ். சுரேஷ்மோகன் ( பயிற்றுவிப்பாளர்). இடமிருந்து முதல் வரிசை: அமுதானந்தர் சில்வெஸ்ரர் ஜரோஷன், ஸ்ரீஸ்கந்தராஜா கௌதமன், சதாகரன் திரேசன், ஏ. தனுசன், கணேசலிங்கம் நிதுஷன், செல்வராசா மதுஷன், யோகராசன் கிருபாகரன், எஸ். தசோபன், விஜயகுமார் திசோத். இடமிருந்து வலம்- இரண்டாவது வரிசை: சதீஸ் கோமேதகன், சுரேஷ் கார்த்தீபன், உதயகுமார் பிரியலக்க்ஷன், கே. தீபன்ராஜ், சிவபாலசுந்தரம் அலன்ரஜ், விகிலியாஸ் டினோஜன்

 

St.-John -Jaffna

பரியோவான் கல்லூரி: இடமிருந்து வலம்- இருப்பவர்கள் : பி. லவேந்திரா ( பயிற்றுவிப்பாளர்), அருள்நந்தன் கானாமிர்தன், பரமானந்தம் துவாரகசீலன், சஜீந்திரன் கபில்ராஜ் (அணித்தலைவர்), வண . என்.ஜே . ஞானபொன்ராஜா (அதிபர்), ரவீந்திரன் லோகதீஸ்வரன் (உப அணித்தலைவர்), மணிவண்ணன் சிந்துர்ஜன், வி. குமணன் (விளையாட்டு பொறுப்பாசிரியர் ). இடமிருந்து முதல் வரிசை: செபமாலைப்பிள்ளை ஜெனி பிளமிங், வசந்தன் யதுசன், ஜெயக்குமார் கிசாந்துஜன், அன்ரோனிப் பிள்ளை கிசஜந்தன், றொனி ஷெலுமில், திலகராசா சிவதர்சன், இராஜசிறிபிரிய பிரிசங்கர். இடமிருந்து வலம்- இரண்டாவது வரிசை: சந்திரமோகன் தேவபிரசாந்த்,தேவராஜா கஜீபன், சிவலிங்கம் டினோஜன், கே. கபில்ராஜ், அமரசேன ஹெர்ஓல்ட் லஷ்கி.