செய்திகள்

வடக்கில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கினால் அங்கு சிங்களவரையும் குடியேற்றுங்கள்: ஜாதிக ஹெல உறுமய

வடக்கிலுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்படுமானால் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள மக்களின் காணியுரிமை உறுதி செய்யப்பட வேண்டுமென தெரிவித்த ஜாதி ஹெல உறுமய வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் பட்சத்திலேயே தமிழ் மக்களின் காணிப் பிரச்சினைக்கு நியாயமான முறையில் தீர்வு காண முடியுமெனவும் தெரிவித்துள்ளது.

பத்தரமுல்லையிலுள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சித்தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அக்கட்சியின் ஊடகச் செயலாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கிலுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றிவிட்டு அப்பகுதியில் தமிழர்களை குடியேற்ற வேண்டுமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஆனால் யுத்த காலப் பகுதியில் வெளியேற்றப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றுமே பேசுவதில்லை.

வடக்கில் இராணுவம் மட்டும் காணிகளை கையகப்படுத்தவில்லை. யுத்தக்காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பினரும் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் காணிகளை கையகப்படுத்தினர். அப்போது அக்காணிகளில் மாவீரர் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டதுடன் அது தொடர்பலான ஆவணங்கள் அழிக்கப்பட்டதால் சிங்கள, முஸ்லிம் மக்கள் தமது சொந்த இடங்களை அடையாளம் காண முடியாமல் உள்ளது.

அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றி அதில் தமிழ் மக்களை குடியமர்த்துவதற்கு முன்னர் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களை மீண்டும் வடக்கில் குடியேற்ற வேண்டும். இல்லையேல் அகற்றப்படும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் சிங்கள, முஸ்லிம் மக்கள் குடியேற்றப்பட வேண்டும்.

1981 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின் படி வடக்கில் 21 ஆயிரம் சிங்களவர்கள் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளன. அந்த மக்கள் காணி உரிமைகளை உறுதி செய்ய வேண்டும். இந்தக் காணி விவாகரத்தில் முஸ்லிம், சிங்கள மக்களுக்கு நியாயம் வழங்குவதனூடாகவே தமிழ் மக்கள் தமது காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

அத்துடன் 1983 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு கலவரத்தினால் மக்களை மீண்டும் இலங்கைக்குக் கொண்டு வந்து குடியமர்த்த வேண்டுமென சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் இதில் தெளிவானதொரு வரலாறு உள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற கலவரத்தால் இந்தியாவில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்கள் தொடர்பான பிரச்சினையை இரு நாட்டு அரரசாங்கங்களும் பேசித் தீர்வு கண்டுவிட்டன.

1986 ஆம் ஆண்டு இப்பிரச்சினை தொடர்பிலான இருநாட்டுப் பேச்சுவார்த்தையில் இந்தியாவின் சார்பில் பங்கு கொண்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஜெ.என்.டிக்ஷித், இந்தியாவில் தஞ்சம் புகுந்த இலங்கையர்களை பொறுப்பேற்க தாம் தயாராக இருப்பதாக தெரிவித்தார். அதற்குப் பதிலாக இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளியினருக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.