செய்திகள்

வடக்கில் பீதியை ஏற்படுத்தியுள்ள திடீர்க் கைதுகளும், கடத்தல்களும்: இதுவரை 12 பேர் கைது!

யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னர் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரினால் ஆறு பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தம்மிடம் முறைப்பாடு பதிவு செயப்பட்டு உள்ளதாக யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இதனைவிட நேற்று பகல் மேலும் ஒருவர் கைதாகியுள்ள அதேவேளையில், இருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றொரு தகவலின்படி இதுவரையில் 12 முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கடந்த மார்ச் மாதம் 30ம் திகதி சாவகச்சேரி மறுவன்புளவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தற்கொலை அங்கி ஒன்றும் நான்கு கிளைமோர் குண்டுகளும் கைப்பற்றபட்டன. அதனை தொடர்ந்து குறித்த வீட்டில் வாடகைக்கு இருந்த நபர் கைது செய்யப்பட்டார். அவரின் கைதினை தொடர்ந்து யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் பலர் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரினால் கைது செய்யப்பட்டு வருகின்றார்கள்.

அக் கைதுகள் தொடர்பில் இதுவரை ஆறு முறைப்பாடுகள் தமக்கு கிடைக்க பெற்று உள்ளன. சாவகச்சேரி பகுதியை சேர்ந்த இருவரும் , கிளிநொச்சி , கல்வியங்காடு , நீர்வேலி , மற்றும் மானிப்பாய் ,ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா ஒருவரும் கைது செய்யப்பட்டு உள்ளதாக முறைப்பாடு கிடைக்க பெற்று உள்ளன.

அதேவேளை நேற்று புதன் கிழமை மன்னார் பகுதியில் வைத்து தமிழரசு கட்சியின் இளைஞரணி செயலாளரும் புதியவன் பத்திரிக்கை ஆசிரியருமான வி.எஸ். சிவகரன் கைது செய்யப்பட்டார். அதேநேரம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு முள்ளியான் பகுதியை சேர்ந்த சேர்ந்த ஜோர்ஜ் ராஜநாயகம் (வயது 42) மற்றும் வீ.மைக்கல் (வயது 45) ஆகிய இருவரும்  கடத்தப்பட்டு உள்ளனர்.

தொடரும் இந்தக் கைதுகளும் கடத்தல்களும் வடக்கில் பெரும் அச்சநிலையை ஏற்படுத்தியுள்ளது.
R-06