செய்திகள்

வடக்கில் புதிய முகாம்கள் அமைக்கப்படாது: அமைச்சர் ராஜித உறுதி

வடக்கில் எதிர்காலத்தில் இராணுவ முகாம்களை அமைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சரவை பேச்சாளரும் , சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவிக்கின்றார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று ஊடகவியலாளர்களால் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வட பகுதியில் இராணுவ தேவைகளுக்காக சுவீகரிக்கப்பட்டுள்ள தனியார் காணிகள் தொர்பில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளதாகவும் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் முழுமையான விபரங்கள் திரட்டப்பட்டு, அவை என்ன நோக்கத்தின் அடிப்படையில் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்ற காரணங்களையும் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.