செய்திகள்

வடக்குக் கிழக்கில் மக்கள் மீள்குடியேற்றப்படாவிட்டால் போராட்டங்கள் வெடிக்கும்:சுரேஷ் பிரேமச்சந்திரன்

வடக்குக் கிழக்கில் தமிழ்மக்களுடைய நிலங்களைக் கையகப்படுத்தி வைத்துள்ள இராணுவம் வெளியேற்றப்பட்டு அங்கு உடனடியாக மக்கள் மீள் குடியேற்றப்பட வேண்டும். இராணுவம் வடக்குக் கிழக்கிலிருந்து வெளியேற்றப்பட்டால் மட்டுமே மக்களுடைய மீள்குடியேற்றம் சாத்தியப்படும் என்றும் இங்கு சாதாரண சூழல் நிலவும் என்றும் நானும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனும் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகின்றோம். படையினரை அகற்றி மீள்குடியேற்றத்தைத் துரிதப்படுத்தாவிட்டால் பாரியளவிலான போராட்டங்கள் வெடிக்கும். முன்னைய ஆட்சிக் காலத்தில் இல்லாதவளவுக்கு இது கடுமையான போராட்டமாக இருக்குமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் எச்சரித்துள்ளார்.

மக்களுடைய மீள்குடியேற்றம் தொடர்பாக இராணுவமே முடிவெடுக்க வேண்டும் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறிய கருத்துக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றம் என்பது இராணுவம் மக்களுடைய காணிகளிலிருந்து வெளியேறுவதுடன் தொடர்புடையது. ஏனெனில் இப் பகுதிகளில் தமிழ்மக்களுக்குச் சொந்தமான காணிகள் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் படையினர் கையகப்படுத்தியிருக்கின்ற 99 வீத நிலங்களும் மக்களுடைய உறுதிக் காணிகளாகவே உள்ளன. இவற்றில் மிகச் சொற்பமான பகுதிகளே மக்களுக்குச் சொந்தமானவையாகும்.

யாழ்.மாவட்டத்தில் வலி.வடக்கு, வடமராட்சி உள்ளிட்ட பலவிடங்களில் 10 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீள்குடியேற்றத்துக்காகக் காத்திருக்கின்றார்கள். ஓரிரு வருடங்களாக அன்றிப் பல்லாண்டு காலமாக இவர்களின் காத்திருப்பு நீடிக்கின்றது.

இப்பொழுது மக்களுடைய மீள்குடியேற்றம் தொடர்பாக இராணுவமே முடிவெடுக்க வேண்டுமென்று பிரதமர் கூறிய கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழ்மக்களுடைய மீள்குடியேற்றத்தைத் தீர்மானிப்பதற்கு இராணுவம் யார்? இராணுவத்திற்கும் மக்களுடைய மீள்குடியேற்றத்துக்கும் என்ன சம்பந்தமிருக்கின்றது தமிழ்மக்களுடைய மீள்குடியேற்றம் தொடர்பாக நாங்கள் அரசாங்கத்துடன் பேசாமல் இராணுவத்துடன் பேச வேண்டுமா? போன்ற கேள்விகள் எழுகின்றன.

இராணுவம் தான் மீள்குடியேற்றம் தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என்று கூறினால் இந்த அரசாங்கத்துடன் நாங்கள் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும்.

பிரதமர் மற்றும் அமைச்சர்களின் மாறுபட்ட கருத்துக்களால் புதிய அரசாங்கத்தின் மீது தாங்கள் வைத்திருந்த நம்பிக்கை பலவீனப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கவலை வெளியிட்டார்.