செய்திகள்

வடக்கு கிழக்கினை பிரித்து இந்தியாவின் தமிழகத்துடன் இணைக்கப்போகின்றார்கள் என்று சிங்களவர்கள் அஞ்சுகிறார்கள் : துரைராஜசிங்கம்

வடக்கு கிழக்கினை பிரித்து இந்தியாவின் தமிழகத்துடன் இணைக்கப்போகின்றார்கள் என்று சிங்கள மக்களில் சிலர் அஞ்சுகின்றார்கள். நாங்கள் சுயமாகவே வாழவிரும்புகின்றோம். தமிழகத்தின் அரசியல் எங்களுக்கு தேவையில்லை. பிரிந்துசென்று எங்கும் சேர்வது தொடர்பான அரசியலை நாங்கள் கனவில் கூட நினைத்தது கிடையாது என மாகாண விவசாய,நீர்பாசன,கூட்டுறவு மீன்பிடித்துறை அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருமண்வெளியில் நீண்டகாலம் சமூகப்பணியாற்றிவரும் வரையறுக்கப்பட் குருமண்வெளி சிக்கன சேமிப்பு கடனுதவி கூட்டுறவு சங்கத்தின் 29வது ஆண்டு நிறைவும் கூட்டுறவு சங்கத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.

குருமண்வெளி சிக்கன சேமிப்பு கடனுதவி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் க.நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய,நீர்பாசன,கூட்டுறவு மீன்பிடித்துறை அமைச்சர் கி.துரைராஜசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கிழக்கு மாகாணசபையில் நாங்கள் கால் உடைக்கப்பட்டவர்களாகவும் கூண்டில் அடைக்கப்பட்டவர்களாகவும் உள்ளோம்.அரச நிர்வாகம்போன்றே மாகாணசபையும் இயங்குகின்றது.மாகாணசபை தீர்மானம் எடுக்கவேண்டும்.நாங்களே தீர்மானிக்கின்ற அதிகாரம் வழங்கப்படவேண்டும்.எங்கள் பிரதேசம் தொடர்பான தீர்மானத்தினை நாங்களே எடுத்து அதனை நடைமுறைப்படுத்துவோம்.

இந்த நாடு பன்மைத்துவமிக்க நாடு என்ற அடிப்படையில் அதன் பன்மைத்துவம் அங்கீகரிக்கப்படவேண்டும்.அதன் பின்னர் அதற்கேற்றவாறு அரசியல்வழிமுறைகள் கையாளப்படவேண்டும்.

இந்த நாட்டினை ஒரே நாடாக ஒற்றையாட்சியின் கீழ் இருக்கவேண்டும் என்பதில் மிகவும் அக்கரையுடன் இருந்தவர்கள் எமது தலைவர்கள்தான்.

தமிழர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும். அதற்கு இனரீதியான பிரதிநிதித்துவம்தான் சிறந்தது என்ற முன்மொழிவினை புறந்தள்ளி பிரதேச ரீதியான பிரதிநிதித்துவத்தான்வேண்டும் என்கிற நிலைமைக்கு சிங்கள தலைவர்கள் வந்தபோது தமிழர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் தமிழர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் அந்த பிரதேச ரீதியான பிரதிநிதித்துவம் கையாளப்படவேண்டும் என சேர் பொன்.இராமநாதனுக்கு பின்னர் கடமையேற்ற சேர்.பொன்.அருணாசலம் அவர்கள் கருத்தினை முன்வைத்தபோது அதனை புறந்தள்ளினார்கள்.

சேர்.பொன்.அருணாசலம் அவர்களை இலங்கை தேசிய காங்கிரசில் உறுப்பினராக்கி கொழும்பு நகரப்பகுதியை அவருக்கு வழங்குவதாக கூறிவிட்டு இரகசியமான முறையில் தேர்தல் நியமனப்பத்திரத்தினை இலங்கை தேசிய காங்கிரசில் வேறு ஒருவரின் பெயரில் தாக்கல் செய்துவிட்டு சேர்.பொன்.அருணாசலம் அவர்களை வெளியேற்றினர்.அப்போதுதான் இலங்கையில் முதன்முறையாக பெரும்பான்மை என்ற சொல் பாவிக்கப்பட்டது.

அதன் பின்னரே முதன்முதலாக அருணாசலம் அவர்களினால் தமிழர்கள் இந்த நாட்டில் சுயமரியாதையுடன் வாழவேண்டுமானால் தமிழீழம் அமைக்கப்படவேண்டும் என்று கூறினார்.தந்தை செல்வாவோ,பிரபாகரனோ எங்களின் அரசியலில் தமிழீழம் என்ற சொல்லை முதன்முறையாக உச்சரித்தது கிடையாது.மிகவும் அறிவுபூர்வமாக சிந்தித்த சேர்.பொன்.அருணாசலம் அவர்கள்தான் அந்த வார்த்தையினை முன்வைத்தார்.

இந்த நாட்டினை ஒரு நாடாக வைத்துக்கொண்டு அரசியல் அதிகாரங்களை பகிர்ந்துகொண்டு தோழமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழக்கூடிய ஒரு அரசியல் முன்மொழிவினை 1949 டிசம்பர் 18ஆம் திகதி மருதானை எழுதுவினைஞர் மண்டபத்தில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் அங்குரார்ப்பண கூட்டத்தில் தந்தை செல்வா முன்வைத்தார்.அதுதான் கூட்டாட்சியென்றும் சமஸ்டி என்றும் சொல்லப்பட்டது.

அதிகாரம் தேவையான இடங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.ஒரு மின்மாற்றியை அமைத்து முழு நாட்டுக்கும் மின் வழங்கமுடியாது.அதனாலேயே பல இடங்களில் மின்மாற்றி அமைக்கப்பட்டு சீரான மின்சாரம் விநியோகிக்கப்படுகின்றது.அரசியலும் இவ்வாறுதான் இருக்கவேண்டும்.

ஒரு இடத்தில் இருந்து அரசியலை நாட்டின் அனைத்து மூலைகளுக்கும் கொண்டுசெல்லமுடியாது.இந்த நாட்டில் சீரான அரசியலை கொண்டுசெல்வதுதான் சமஸ்டி அதிகாரமாகும்.மின்குமிழை கொடுத்துவிட்டு மின்மினி பூச்சி எரிவதுபோல் மின்சாரத்தினை வழங்குவது சிறந்த மின்சார விநியோகம் அல்ல.அதனால்தான் சஸ்டியை செயற்படுத்தவேண்டும் என நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றோம்.

திறந்த மனதுடன் உண்மையான அரசியலை பேசும்போது அந்த நல்ல தேசபற்றாளர்களை மூலைக்குள் முடக்க எண்ணும் அரசியல்வாதிகளே இந்த நாட்டில் அதிகம் உள்ளனர்.இந்த விடயங்களையெல்லாம் கவனத்தில்கொண்டே ஜனாதிபதி அவர்கள் ஏறாவூரில் உரையாற்றியுள்ளார்.

இந்த நாட்டில் தமிழ் மக்கள் விமோசனம்பெற்று வாழவேண்டுமானால் எங்களுக்குள் ஒற்றுமைவேண்டும்,தென்னிலங்கையில் உள்ள இரண்டு பெரும் அரசியல்கட்சிகளும் ஒன்றுசேரவேண்டும்,இதற்கு ஏற்றவகையில் உலக அரசியல் சாதகமாக இருக்கவேண்டும் ஆகிய மூன்று விடயங்களும் வேண்டும் என்பதை எங்களது தலைவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்துள்ளனர்.இந்த மூன்று நிலைமைகளும் இன்று உருவாகியுள்ளது.

இந்த மூன்று விடயங்களையும் வைத்துக்கொண்டு மிகமிக கவனமாக அரசியலை வழிநடத்திச்செல்லவேண்டிய மிகப்பாரிய பொறுப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது சுமத்தப்பட்டுள்ளது. எங்களது தலைவர் தொடர்ச்சியாக விமர்சனங்களை எதிர்கொண்டுவருகின்றார். அவர் காட்டும் வழியை பொறுத்துக்கொள்ளமுடியாதவர்கள், விளங்கிக்கொள்ளமுடியாதவர்கள் பல்வேறு விதங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சித்துக்கொண்டிருப்பதை நாங்கள் காணலாம்.

மிகவும் கவனமாக மிகவும் நிதானமாக இந்த விடயத்தினை நகர்த்திச்சென்று 2016ஆம் ஆண்டு நாங்கள் சிறந்த அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்ளவேண்டும்.எமது அடுத்த சந்ததி மீண்டுமொரு துன்பத்திற்குள் விளாத வகையில் அரசியல்சாசனம் ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என தலைவர் சம்பந்தர் ஐயா கூறியுள்ளார்.இதற்காக தென்னிலங்கையில் உள்ள நல்ல சக்திகளை அடையாளம் கண்டு.அவர்களுக்கு பலத்தினை வழங்கி செயற்படுத்தவேண்டியவர்களாக உள்ளோம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நினைத்துவிட்டால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நினைத்துவிட்டால் இங்கு சிறந்த அரசியலமைப்பினை கொண்டுவந்துவிடமுடியும் என சிலர் நினைக்கின்றனர்.

தென்னிலங்கையில் உள்ள அனைத்து மக்களையும் சமாதானப்படுத்தவேண்டும். மக்களின் வாக்குகளைப்பெறவேண்டுமானால் அவர்களை சிறந்த நிலைப்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும்.அதற்காக நாங்கள் எமது பகுதிகளில் இருந்து சாதகமான விடயங்களை தெரிவிக்கவேண்டும்.

அரசியலை இரண்டுவிதமாக பார்க்கலாம்.நிதான அரசியல்,தீவிரவாத அரசியல்.நிதான அரசியல் முன்னெடுக்கப்படும்போது குழப்புதல் என்னும் அரசியல் பேரினவாதிகளுக்கு கொடுக்கப்பட்டது.பண்டா-செல்வா ஒப்பந்தமாக இருந்தாலும் டட்லி-செல்வா ஒப்பந்தமாக இருந்தாலும் சரி பேரினவாதிகளினால்தான் முறியடிக்கப்பட்டது.

அதன் பின்னர் வந்த 30வருடகாலத்தில் யார் குழப்பினார்கள் என்பதில் பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் எழுகின்றன.அந்த 30வருடகால வரலாற்றினை வைத்துக்கொண்டு தமிழர்கள் குழப்புகின்றார்கள் என்று பேரினவாதிகள் கூறுவதற்கு சந்தர்ப்பம் உள்ளது.அவ்வாறான அச்சத்திற்கு தமிழர்கள் இலக்காகவேண்டிய அவசியம் இல்லை.

தமிழர்களுக்கு சரியான தீர்வுத்திட்டத்தினை முன்வைக்கும்போது தமிழர்கள் அதனை குழப்பமாட்டார்கள் என்ற செய்தியை பேரினவாதிகளுக்கு வழங்கவேண்டும்.அதற்காக நாங்கள் ஓரணிக்குள் வரவேண்டும்.

இந்த நாட்டில் தமிழர்களைப்பொறுத்தவரையில் தேசிய அரசியல் முக்கியம் அல்ல.பிராந்திய அரசியலே முக்கியமானதாகும்.எங்களது பிராந்தியங்களுக்கான அதிகாரங்களைப்பெறவேண்டுமானால் பிராந்தியத்தில் எங்களுக்காக குரல்கொடுக்கும் கட்சிக்கே அங்கீகாரம் வழங்கவேண்டும்.

அவ்வாறு இல்லாமல் பட்டிருப்பு தொகுதியை பொறுத்தவரையில் சாதி,குல,பேதங்களை அடிப்படையாகக்கொண்டு வாக்களித்துவந்துள்ளீர்கள்.இதனை தூக்கியெறியவேண்டும். கொள்கைக்கு வாக்களிக்கவேண்டும்.

தமிழர்களின் குரலை பாராளுமன்றத்தில் ஒலிக்கச்செய்து பிராந்தியங்களுக்கான அதிகாரத்தினைப்பெற்றுக்கொடுக்க பாடுபட்டுவரும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்கவேண்டும்.அத்துடன் எங்களுடன் செயற்படுவதற்கு புத்திஜீவிகளும் ஆர்வலர்களும் இணைந்துகொள்ளவேண்டும்.

இந்த நாட்டில் தமிழர்கள் மிகப்பெரும் ஆபத்துக்கு முகம்கொடுக்கவேண்டியவர்களாகவுள்ளோம்.தமிழன் வாழவேண்டுமானால் தமிழன் தன்னை ஆளக்கூடிய அதிகாரத்துடன் வாழவேண்டும்.இந்த நாட்டை பிரித்துதான் ஆளவேண்டும் என்ற அவசியம் இல்லை.தனிநாட்டு கோரிக்கையினை மக்களின் ஆணைகிடைத்ததன் பின்னர் ஒரு கோரிக்கையாகவே வைத்தோம்.

அமிர்லிங்கம் அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது மக்கள் எங்களுக்கு தனிநாட்டுக்கான அங்கீகாரத்தினை வழங்கியுள்ளனர்.ஆனால் நாங்கள் இந்தியாவில் உள்ளதுபோன்ற அதிகார பகிர்வினை வழங்கும்போது அது தொடர்பில் பரிசீலிக்க தயார் என்று அப்போது கூறினார்.

தமிழ்நாடு என்ற கோரிக்கை மக்கள் எங்களுடன் உள்ளனர் என்பதற்கான பேரம் பேசுவதற்கான,எங்களது உரிமையினை எடுத்துக்காட்டுவதற்கான ஒரு அடையாளமாகவே இருந்தது தவிர இந்த நாட்டை பிரிப்பதற்காக அல்ல.

வடக்கு கிழக்கினை பிரித்து இந்தியாவின் தமிழகத்துடன் இணைக்கப்போகின்றார்கள் என்று சிங்கள மக்களில் சிலர் அஞ்சுகின்றார்கள்.நாங்கள் சுயமாகவே வாழவிரும்புகின்றோம்.தமிழகத்தின் அரசியல் எங்களுக்கு தேவையில்லை.எங்களுக்கு சுயமான அரசியல் உள்ளது. பிரிந்துசென்று எங்கும் சேர்வது தொடர்பான அரசியலை நாங்கள் கனவில் கூட நினைத்தது கிடையாது.

சுயநிர்ணயம் உள்ள சமஸ்டி ஆட்சியை ஏற்படுத்தும் நிலைமைக்கு நாங்கள் செல்லவேண்டும்.ஒரு தீர்வினைப்பெற்றுக்கொள்வது அல்ல பெரிது,பெற்றுக்கொண்ட தீர்வினை தொடர்ச்சியாக நாங்கள் பாதுகாக்கவேண்டும்.நீடித்து நிலைக்ககூடிய தீர்வுத்திட்டம் எங்களுக்கு தேவை.

அவ்வாறு ஒரு தீர்வு வரவேண்டுமானால் மனங்களிடையே இணைவு ஏற்படவேண்டும்.சிங்களவர்,தமிழர்,முஸ்லிம்கள் என்று ஒரு அடையாளத்திற்கு சொல்லப்படவேண்டுமே ஒழிய நாங்கள் ஒரே நாட்டவர்கள் என்ற எண்ணப்பாங்கு எல்லா திசைகளிலும் இருந்துவரும் நிலைமை ஏற்படுத்தப்படவேண்டும்.

 IMG_0002 IMG_0091 IMG_0133