செய்திகள்

வடக்கு- கிழக்கில் சந்தடியில்லாத யுத்தமொன்று நடக்கிறது: சர்வதேச சுயாதீன ஆய்வில் தெரிவிப்பு

யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்கள் பூர்த்தியாகியுள்ள போதிலும் சந்தடியில்லாத யுத்தமொன்று இராணுவமயமாக்கப்பட்டுள்ள இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்வதாக சுயாதீன அமைப்பொன்றின் இலங்கை குறித்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“2009 இல் யுத்தம் முடிவிற்கு வந்துள்ள போதிலும் மறைமுக யுத்தமொன்று அதிகளவிற்கு இராணுவமயப்படுத்தப்பட் வடக்கு கிழக்கில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. உயிர் இழப்புகள், குடும்பங்கள் காணமற்போனது,வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு, நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் கண்ணிற்கு தெரியாத அதிருப்தியொன்று காணப்படுகின்றது-கொழும்பில் அதிகாரத்தில் உள்ளவர்களிடமிருந்து உரிய பதில்கள் கிடைக்காததால் இவை அனைத்தும் மோசமடைந்துள்ளன” என இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் மீறல் மற்றும் சொத்துக்கள் பறிக்கப்படுதலை பட்டியலிடும் கடும் விமர்சனத்தை இந்த அறிக்கை இலங்கை அரசாங்கத்துக்கெதிராக முன்வைக்கிறது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் போருக்குப் பின்னர் தமிழ் மக்களின் மனித உரிமைகள் தொடர்பில் கலிபோர்னியாவின் ஓக்லான்ட் ஆய்வு நிறுவகம் இலக்கைக்கு வியஜம் செய்து நடத்திய ஆய்வின் அறிக்கை ( யுத்தத்தின் நீண்ட நிழல் ) இன்று கலிபோர்னியாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இலங்கையின் புதிய அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள வாக்குறுதிகளை அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை சமாதானத்தை காப்பாற்றுதல் மீண்டும் எழுச்சியை தடுத்தல் போன்ற விடயங்களில் பழைய மனோபாவமே காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் எதிர்காலம் நிச்சயமற்ற நிலையில் சிக்குண்டுள்ளது. சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளை காப்பாற்ற கூடிய திறன் புதிய அரசாங்கத்திற்குள்ளதா என்பது வெளிப்படையான கேள்வி. இலங்கையில் சிறுபான்மையினத்தவர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிசெய்வதில் சர்வதேச சமூகம் எவ்வளவு தூரம் அக்கறையும், அர்ப்பணிப்பும் கொண்டுள்ளது என்பதும் வெளிப்படையான கேள்வி என தமிழர் தேசிய பிரச்சினைக்கு தீர்வை காண்பதில் இலங்கை மற்றும் சர்வதேச சமூகத்தின் நேர்மை குறித்தும் குறிப்பிட்ட அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தமிழர்தாயகப்பகுதிகளில் இராணுவத்தை நிறுத்திவைத்திருப்பது,பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான வழிமுறையல்ல மாறாக தமிழர்களின் பொருளாதார சமூக அபிவிருத்திக்கு அது தடையாகவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது போன்று மனிதஉரிமைகள், வன்முறைகள்,நில அபகரிப்பு மற்றும் வாழ்வாதர அழிப்பு போன்றவற்றிற்கான காரணமாக வடக்குகிழக்கில் இராணுவத்தின் பிரசன்னமே காணப்படுகின்றது.

வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுவது குறித்து புதிய அரசாங்கம்கொண்டுள்ள தயக்கமும்,இலங்கை படையினர் அதிகாரத்தின் மீது தொடர்ந்தும் கடும் செல்வாக்கை செலுத்துவதும் புதிய அரசாங்கத்தை வரவேற்று கொண்டாடிக்கொண்டிருக்கும்,நல்லிணக்கம் குறித்து பேசிக்கொண்டிருக்கும் சர்வதேச சமூகத்திற்கு கடும் கவலையை அளிக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அறிக்கையின் இறுதியில் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்காக சர்வதேச சமூகம் இலங்கையில் தலையிடவேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது இடம்பெறுவதை உறுதிசெய்யவேண்டியது சர்வதேச சமூகத்தின் கடமையாக அமையவேண்டும், இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் சர்வதேச சமூகம் செல்வாக்கு செலுத்துவதற்கு வாய்ப்பாக அமைகின்றது. ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் எய்த முடியாத சாதகமான தாக்கத்தை இந்தஅரசாங்கத்தின் கீழ் அது அடையலாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சில முக்கிய விடயங்கள் வருமாறு.
ஆயிரக்கணக்கான தமிழர்கள் இன்னமும் உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர்,நிலமோ அல்லது வாழ்வாதரமோ இல்லாத நிலையில் உள்ளனர். அரசாங்கத்தின் திட்டங்கள் மூலமாக மீள்குடியேற்றப்பட்வர்களும்,அவர்களது விருப்பமின்றி அல்லது உரிய தகவல்கள் இன்றி குடியேற்றப்பட்டுள்ளனர். மேலும் அவர் தங்கள் வாழ்வை கட்டியெழுப்புவதற்காக போதிய உட்கட்டமைப்பு வசதி இன்றி காணப்படுகின்றனர்.

இலங்கையின் வடக்கு கிழக்கில் இராணுவம் இன்னமும் உயர் பாதுகாப்பு வலயங்களை ஆக்கிரமித்துள்ளது. 2014 இல் ஆகக் கூடிய 160 000 படையினர், முற்றுமுழுதாக சிங்களவர்கள் வடக்கில் தமிழர்கள் வாழும் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். 2012 இல் வடபகுதியின் சனத்தொகை ஒரு மில்லியனுக்கும் சற்று அதிகமாக காணப்பட்டதை கருத்தில் கொள்ளும் போது 6 பொதுமக்களுக்கு ஒரு இராணுவம் என்ற நிலை யுத்தம் முடிவடைந்த பின்னரும் வடக்கில் காணப்படுகிறது.

இராணுவ ஆக்கிரமிப்பு என்பது வெறுமனே பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக மாத்திரம் காணப்படுவதில்லை. இராணுவம் சாராத நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். பாரிய வர்த்தகங்கள், கட்டுமான திட்டங்கள் உட்பட பலவற்றை அவர்கள் முன்னெடுக்கின்றனர். உல்லாசப் பயண விடுதிகள், உணவகங்கள் வடக்கு மற்றும் கிழக்கின் முக்கிய சாலைகளில் காணப்படும் சிறிய உணவகங்கள் போன்ற பல இராணுவத்தினரினுடையவை.

தற்போது இடம்பெயர்ந்துள்ள மக்களின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளில் உல்லாசப் பயண விடுதிகள், கோல்ப் மைதானங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சுடன் நேரடியாக தொடர்பு கொண்டு குறிப்பிட்ட உல்லாசப் பயண விடுதிகளுக்கான முற்பதிவுகளை வெளிநாட்டவர்கள் செய்து கொள்ளலாம்.

இந்த வர்த்தக நிலையங்களும் உல்லாச பயண விடுதிகளும் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் நிலங்களில் அமைந்துள்ளன. பல தடவை கோரிக்கைகள் விடுத்துள்ள போதிலும் மனுக்களை தாக்கல் செய்துள்ள போதிலும் இந்த மக்களுக்கு எந்த வழியும் கிடைக்கவில்லை.

தற்போதைய நில அபகரிப்புகள் தமிழ் மக்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட நீண்ட கால ஓடுக்குமுறை வரலாற்றின் ஒரு தொடர்ச்சியே.