செய்திகள்

வடக்கு கிழக்குக்கு வெளியேயும் போட்டியிடுவோம்: சுமந்திரன் அறிவிப்பு

தமது பிரதான தளமான வடக்கு- கிழக்குக்கு வெளியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடக் கூடும். இது கொழும்பு அல்லது கம்பாஹவாக இருக்கும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார்.

“அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் நாம்   முழுமையாக பங்களித்தோம். பிரதம நீதியரசருக்கு எதிரான பதவி விலக்கல்  பிரேணையை நாம் எதிர்த்தோம். எனவே, தற்போதைய  நிலையில் நாம் தேசிய பிரச்சினைகளில் பங்களித்து வருகிறோம்” எனவும் சுமந்திரன் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்திய சுமந்திரன், “நாம் கரிசனை கொண்டுள்ள தேசிய பிரச்சினை என்று ஒன்றுள்ளது.  அது தீர்க்கப்பட வேண்டும். அதை தேர்தலுக்கு முன்னர் முழுமையாக தீர்க்க வேண்டிய தேவையில்லை என நாம் இந்த அரசாங்கத்துடன் ஓர் உடன்பாட்டுக்கு  வந்துள்ளோம்”  என்றார்.

‘இதை  பிரதமர், நிதி அமைச்சர் ஆகியோர் நாடாளுமன்றத்தில் கூறினர். இந்த அரசாங்கம்  19ஆவது திருத்தின் போது இது பற்றி கூறியது. அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கு இறுதி தீர்வு  காணப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் கூறினார். இந்த தீர்வு எமது கரிசனையாகவும்  மக்களின் கரிசனையாகவும் உள்ளது’ என்றும் அவர் கூறினார்.

‘அரசாங்கம்  சரியான  திசையில் செல்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  கருதுகிறது. ஆனால், காணி மற்றும் அரசியல் கைதிகளின் பிரச்சினை  தீர்க்கப்படவில்லை. 100 நாட்களினுள் முழுக் காணிகளும் விடுவிக்கப்படும் என எதிர்ப்பார்த்தோம். ஆனால், 5 சதவீதமான காணிகள் தான் விடுவிக்கப்பட்டுள்ளன. எனவே, இதையிட்டு நாம் விரக்தியடைந்துள்ளோம். அரசாங்கம் , காணிகளை விடுவித்து வருவதால்தான் நான் அரசாங்கம் நல்ல வழியில் செல்வதாக கூறினேன்’ என்றார்.