செய்திகள்

வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கென விசேட இராணுவம் தேவையில்லை: டக்ளஸ்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விசேட பாதுகாப்பிற்கோ முகாம்களுக்கோ தற்போது அவசியமில்லை. நாட்டில் ஏனைய பகுதிகளில் இராணுவப் பிரசன்னம் எந்த அடிப்படையில் உள்ளதோ அதே நிலைப்பாடே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் தேவை என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தி உள்ளார்.

இவ் விடயம் தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்துள்ள தேவானந்தா, “கடந்த கால யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகள் சில பாதுகாப்புத் தேவைகளுக்கென கைப்பற்றப்பட்டன.

2009ம் வருடம் மே மாதம் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் அப்போதைய அரசுடன் நான் தொடர்ந்து மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் பயனாக கணிசமானளவு விவசாய மற்றும் வதிவிடக் காணிகளும் பொது மற்றும் தனியார் கட்டிடங்களும் படிப்படியாக விடுவிக்கப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கப்பட்டன.

இந் நிலையில் எமது மக்களின் தலைவர்கள் எனத் தம்மை இனங்காட்டிக் கொள்ளும் நபர்கள் சிலர் இவ் விடயத்தை தங்களது சுயலாப அரசியலுக்குப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டங்கள் ஊடக அறிக்கைகள் போன்ற கண்துடைப்பு காரியங்களில் மாத்திரம் ஈடுபட்டு முன்னெடுக்கப்பட்டு வந்திருந்த மேற்படி செயற்பாடுகளைத் தடுக்கும் வகையில் செயற்பட்டு வந்தனரே தவிர அம்முயற்சிகளை ஊக்குவிக்கக் கூடிய வகையிலான செயற்பாடுகளில் இறங்கியிருக்கவில்லை.

மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தம் என்ற கொள்கை நிலையில் நின்று எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கூட எமது முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக மேற்படி எஞ்சியுள்ள காணிகள் அதன் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்னாள் ஜனாதிபதியிடமும் முன்வைத்திருந்தோம். இது அவரது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இடம்பெற்றிருந்தது. நாட்டில் தற்போது புதிய அரசு ஆட்சியில் உள்ள நிலையிலும் புதிய ஜனாதிபதி மற்றும் புதிய பிரதமரிடமும் இக் கோரிக்கையை முன்னுரிமைப்படுத்தி வலியுறுத்தியுள்ளோம்.

எனவே மக்களது நிலம் மக்களுக்கே சொந்தம் என்ற எமது கொள்கை அடிப்படையை தொடர்ந்து வலியுறுத்திவரும் நாம் நாட்டில் ஏனைய மாகாணங்களில் தேசிய பாதுகாப்பு கருதி இராணுவப் பிரசன்னம் எந்த அடிப்படையில் உள்ளதோ அதே அடிப்படையிலேயே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இருக்க வேண்டும். இதைவிடுத்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கென விசேட இராணுவத் தேவைகள் இப்போது இல்லை எனத் தெரிவித்தார்.