செய்திகள்

வடக்கு சுகாதார அமைச்சில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றியவர்களுக்கு நிரந்தர நியமனம்

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் திணைக்களங்களில் நீண்ட காலமாக அமைய, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றியவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.

இதுதொடர்பாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

கடந்த காலங்களில் குறிப்பாக நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியான காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தரமான சுகாதார சேவையை வழங்கும் நோக்கில் ஒப்பந்த அடிப்படையில் பலர் சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தனர்.

எனினும் கடந்த அரசில் அங்கம் வகித்த சில அரசியல்வாதிகளின் தலையீட்டால் உரியவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாது வேறு மாவட்டங்களிலிருந்து வருவிக்கப்பட்டவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன.
எனினும் தற்போதைய புதிய அரசியல் சூழ்நிலையில் உரியவர்களுக்கு நியமனம் வழங்க மாகாண சுகாதார அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 857 பேருக்கு எதிர்வரும் நாட்களில் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 270 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 132 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 186 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 106 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 163 பேருக்குமாக மொத்தம் 857 பேருக்கும் நியமனம் வழங்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்வரும் 19ம் திகதி கிளிநொச்சியிலும் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்வரும் 21ம் திகதி வவுனியாவிலும் நியமனக்கடிதங்கள் வழங்கிவைக்கப்படவுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.