செய்திகள்

வடக்கு மாகாண சுகாதார துறை அபிவிருத்திக்கு 4000 மில்லியன் ரூபாய் வழங்க மத்திய சுகாதார அமைச்சு இணக்கம்!

வடக்கு மாகாணத்தின் சுகாதார துறையின் அபிவிருத்திக்கு 4,000 மில்லியன் ரூபாய் வழங்குவதற்கு மத்திய சுகாதார அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

திங்கள் கிழமை நடைபெற்ற மத்திய சுகாதா அமைச்சர் ராஜித சேனாரத்தின அவர்களுடனான சந்திப்பின்போதே இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த திங்கள் கிழமை கொழும்பில் நடைபெற்ற மாதாந்த மாகாண சுகாதார அமைச்சர்களுக்கான மாநாட்டில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் பல்வேறு திட்டமுன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. இதில் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் சுகாதார சேவையை மேம்படுத்தும் முகமாக சுகாதார துறைசார்ந்த உட்கட்டுமான அபிவிருத்தி வேலைகள், மருத்துவமனைகளை தரமுயர்த்தல், மாகாண அமைச்சின் ஐந்தாண்டு திட்ட நடைமுறை, ஆளணி அதிகரிப்பு போன்ற திட்ட முன்மொழிவுகள் மாகாண சுகாதார அமைச்சினால் முன்வைக்கப்பட்டன.

இதில் குறிப்பாக மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கான குழந்தை மருத்துவ பிரிவு அமைத்தல், வவுனியா பொது வைத்தியசாலையில் இருதய நோய்களுக்கான சிகிச்சை பிரிவினை விரிவுபடுத்தல், யாழ்ப்பாணத்தில் பிராந்திய சுகாதார பயிற்சி நிலையம் நிறுவுதல், வவுனியாவில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய தாதியர் பயிற்சிக்கல்லூரி அமைத்தல், சாவகச்சேரி வைத்தியசாலையில் பாரிசவாத நோயளர்களுக்கான விசேட நரம்பியல் பிரிவினை அமைத்தல், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கான மருத்துவ விடுதி அமைத்தல், பருத்தித்துறை தளவைத்தியசாலையில் உளநலமருத்துவ பிரிவுக்கான விடுதி அமைத்தல் போன்ற திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் ஒஸ்ரிய நாட்டின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தின் வைத்தியசாலைகளின் உட்கட்டுமான வசதிகள் மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் இது தொடர்பான ஒஸ்ரிய நாட்டு அமைப்புகளுடனான உத்தியோகபூர்வ சந்திப்பு அடுத்தவாரம் நடைபெறவுள்ளதாகவும் அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

N5