செய்திகள்

வடக்கு முதல்வர் தலைமையிலான குழுவினர் வளலாய் பகுதிக்கு விஜயம் (படங்கள் இணைப்பு)

வடமாகாண முதல்வர் தலைமையிலான குழுவினர் வளலாயில் இராணுவத்தினரிடம் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை சென்று, மீள்குடியேறுவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக மக்களிடம் கேட்டறிந்து கொண்டனர்.

இராணுவத்தால் முகாம்களை அமைப்பதற்கு எனவும், உயர்பாதுகாப்பு வலயங்களை உருவாக்குவதற்கெனவும் கையகப்படுத்தப்பட்ட தமது நிலங்களை விடுவிக்கக் கோரி இடம்பெயர்ந்த மக்கள் பல தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதன் விளைவாக வலிகிழக்கு பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட 250 ஏக்கர் பரப்பளவிலான காணி வளலாயில் கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டது.

25 வருடங்களுக்கும் மேலாக இடம்பெயர்ந்து வாழும் வளலாய் மக்கள் விடுவிக்கப்பட்ட தங்கள் காணிகளைப் பார்வையிடச் சென்றபோது பலத்த அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இராணுவத்தினர் தங்களது தேவைகளுக்கெனப் பயன்படுத்திய ஒரு சில வீடுகளைத் தவிர ஏனையவை யாவும் இருந்த இடம் தெரியாமல் இடித்து நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. உரிமையாளர்கள் அடையாளம் காணமுடியாத அளவுக்குக் காணிகள் பற்றைகளால் மூடிக் காணப்படுகிறது.

தங்கள் காணிகள் விடுவிக்கப்பட்டபோதும் அவற்றில் உடனடியாகக் குடியேறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கும் வளலாய் மக்கள் இதுதொடர்பாக வடக்கு மாகாணசபையினரிடம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து வடமாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் வளலாய் பகுதிக்கு நேரில் சென்று மக்களைச் சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகக் கேட்டறிந்துகொண்டுள்ளனர். மக்களின் முறைப்பாடுளைக் கேட்டறிந்துகொண்ட முதல்வர், சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு ஊடாக உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதற்கு ஆவன செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

வளலாய்க்குச் சென்றிருந்த குழுவில் வடமாகாணசபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், ச.சுகிர்தன் ஆகியோர் இடம்பெற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

02

03

04

05

06

07

09

10

11