செய்திகள்

வடக்கு விவசாய விரிவாக்கத்துக்கு தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமனம்

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் விரிவாக்கல் சேவைகளுக்கென தொழில்நுட்ப உதவியாளர்கள் 14 பேர் புதிதாக நியமனம்  செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பணி நியமனக் கடிதங்களை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவரது அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை  வழங்கி வைத்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் உரையாற்றும்போது,

விவசாயப் போதனாசிரியர் பதவி நியமனம் பெறுவதற்கு விண்ணப்பதாரி க.பொ.த. உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் மூன்று பாடங்களிலும் சித்தி அடைந்திருப்பதோடு, விவசாயத்தில் டிப்ளோமா பட்டமும் பெற்றவராக இருக்க வேண்டும். ஆனால், க.பொ.த. உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் மூன்று பாடங்களிலும் சித்தி அடைந்திருப்பவர்கள் விவசாயப் போதனாசிரியர்களாக வர விரும்புவதில்லை. வேறு துறைகளுக்குச் செல்லவே விரும்புகிறார்கள். இதனால் போதனாசிரியர்களுக்குப் பற்றாக்குறை  நிலவுகிறது.

வடக்கில் போதிய அளவுக்கு விவசாயப் போதனாசிரியர்கள் இல்லாமல் இருப்பதால் எமது விவசாய அபிவிருத்தி வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. இதைக் கருத்திற் கொண்டு க.பொ.த. சாதாரணப் பரீட்சையிலும் சித்தியடைந்து விவசாயத்திலும் டிப்ளோமா பட்டம் பெற்றிருந்தால், அவர்களை சேவையில் இணைத்துக்கொள்ளும் வகையில் விவசாய விரிவாக்கத்துக்கான  தொழில்நுட்ப உத்தியோகத்தர் என்னும் புதிய பணி நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான சேவைப் பிரமாணக் குறிப்பு உருவாக்கப்பட்டு, நேர்முகத்தேர்வு மூலம் 14 பேர் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 15 பேர் மத்திய அரசின் தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமனத்தின் மூலம் வடக்கு விவசாய அமைச்சில் இணைக்கப்பட்டுள்ளனர். இன்னும், இப்பணி நிலையில் 11 வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்சிவ் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர்  டி.றஞ்சன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி. ஜெ.ஜெகநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.